LATEST
Home » அரசியல் » சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையும், தீர்வும்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையும், தீர்வும்.

உலக நாடுகளின் பலவற்றில் இல்லாத ஒரு சிறப்புச் சழுகையாக இலங்கையில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. CWW கண்ணங்கரவின் முயற்சியினால் இந்த இலவச கல்வித் திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இவரே இலவச கல்வியின் தந்தையாகவும் வரலாற்றில் பேசப்படுகிறார். உலகின் பல வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளில் கூட இல்லாத இலவச கல்வித் திட்டத்தை கடந்த பல்லாண்டுகளாக இலங்கை நடைமுறைப் படுத்தி வருகிறது. இலங்கை மக்கள் தொகையில் 90 சதவீதமானவர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதற்கும் இதுவொரு பெரும் காரணமாக அமைந்திருக்கிறது.

மழைக்குக் கூட பாடசாலைப் பக்கம் ஒதுங்க முடியாதளவு கஷ்டத்திலும், வருமையிலும் சிக்கித் தவிக்கும் பல மாணவர்களும் இலவச கல்வி என்ற ஒன்றின் மூலமாகத் தான் தமது கல்வித் தகமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

கல்வி பணத்திற்கு விற்கப்பட்டால் அதனால் பயனடைய முடியாதவர்கள் கல்வியறிவற்றவர்களாக மாறுவதின் மூலம் அறிவற்ற, எழுத்தாற்றல், வாசிப்புத் திறமை போன்றவை இல்லாத ஒரு சமுதாயமாக இலங்கை சமுதாயம் மாறிவிடும்.

உலகின் பல முன்னனி நாடுகளில் வாழும் பலருக்கு எழுத்தறிவோ, வாசித்து அறியும் திறனோ, கல்வியின் முன்னோக்கிய திறமைகளோ இல்லை. அதற்குக் காரணம் கல்வியை பணத்திற்கு அந்நாடுகள் விற்க்க ஆரம்பித்தமையே. பேசும் மொழி ஆங்கிலம் என்பது மாத்திரம் தான் அவர்களுக்குள்ள ஒரே ஒரு ஆதாரமாக இருக்கிறதே தவிர எவ்வித கல்வியறிவுமற்ற பெரும் சமூகம் அந்நாடுகளில் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

உலகின் விலை மதிக்க முடியாதவைகளில் கல்வியும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் இந்தக் கல்வியை பெற்றுக் கொள்வதற்கே தற்போது விலை நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே வேதனைக்குறிதாகும்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசு தரும் அபிவிருத்தித் திட்டங்களும், கல்வி ரீதியிலான ஒத்துழைப்புகளும் மிக முக்கியமானதாகும். ஆனால் நாட்டின் அனைத்து அபிவிருத்திகளையும், கல்வி ஒத்துழைப்புகளையும் அரசு மாத்திரமே முழுமையாக நிறைவேற்றிவிட முடியும் என்பதும் தவறான கருத்தாடலாகும்.

ஆக, ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அனைத்துப் பகுதியிலும் அரசின் ஒத்துழைப்புகள் இருப்பதைப் போல் தனியார் நிறுவனங்கள், தனி மனிதர்கள் மற்றும் குழுக்களின் ஒத்துழைப்புகளும் இன்றியமையாததாகும்.

அந்த வகையில் இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இருந்து வரும் இவ்வேலையில் தனியார் கல்லூரிகளும் இலங்கையில் இயங்கி வருகின்றன. இவை கல்விக்காக மாணவர்களிடம் பணம் வசூலித்து அதனை ஒரு தொழிலாக முன்னெடுத்து வருகின்றன.

சிறு பிள்ளைகளுக்கான UKG, LKG முதல் பல்கலைக் கழகங்கள் வரை தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுடன் ஒப்பிடுககையில் இலங்கையில் தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மிக மிக குறைவு என்பதே யதார்த்தமானதாகும்.

அரச பாடசாலைகளின் குறைவு, கல்வித் தரமின்மை, மொழிப் பிரிவுப் பற்றாக்குறை, வசதிக் குறைவு போன்ற பல காரணங்களினால் தனியார் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

இதே போல் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான இன்னொரு முக்கிய காரணம் திறமை இருந்தும், போதியளவு பெறுபெறுகள் இருந்தும் அரச கல்லூரிகள் மற்றும் பல்கலையில் இடம் கிடைக்காமையும் மாணவர்கள் தனியாரை தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் அமைந்த ஒரு பிரசினைதான் சைட்டம் மருத்துவக் கல்லூரிப் பிரச்சினையுமாகும்.

சைட்டம் கல்லூரிக்கு MBBS பட்டம் வழங்க முடியுமா?

2009 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசின் ஆதரவுடன் மாலபேயில் அமையப் பெற்றது South Asian Institute for Technical and Medicine தனியார் மருத்துவக் கல்லூரி. இதுவே SAITM என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

2009 ல் ஆரம்பிக்கப்பட்ட சைட்டம் மருத்துவக் கல்லூரி என்பது Degree in Bachilor of Medicine and Bechilor of Surgery அதாவது MBBS பட்டம் வழங்க தகுதியுடைய தனியார் மருத்துவக் கல்லூரியாக 2011ல் அப்போதைய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசானாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.

மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் MBBS பட்டம் வழங்க வேண்டும் என்றால் குறித்த கல்லூரி இலங்கை மருத்துவ கவுன்சிலான SLMC – SRI LANKA MEDICAL COUNCIL னின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இலங்கை மருத்துவக் கவுன்சிலின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு SLMC – SRI LANKA MEDICAL COUNCIL ஒரு வருடத்திற்கு உள்ளகப் பயிற்சியை (Internship) வழங்கும். இப்பயிற்சி நெறியை முறையாக பூர்த்தி செய்தவர்களுக்கு மருத்துவராக பணி புரியும் அங்கீகாரத்தை SLMC – SRI LANKA MEDICAL COUNCIL வழங்கும்.

தற்போதுள்ள பிரச்சினை இதுதான்

இலங்கையில் ஒருவர் மருத்துவராக பணி புரிய வேண்டுமாயின் அவர் SLMC – SRI LANKA MEDICAL COUNCIL யின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அங்கீகரிப்பதற்கான தகுதியில் சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக் கழகம் இல்லை என்கிற காரணத்தை கூறி சைட்டம் மருத்துவக் கல்லூரியின் படிப்பை முடித்தவர்களுக்கும் மருத்துவர் அனுமதியை வழங்க SLMC மறுத்து வருகிறது.

SLMC – SRI LANKA MEDICAL COUNCIL அனுமதி கிடைக்காத காரணத்தினால் சைட்டம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு Clinical Training – மருத்துவப் பயிற்சி வழங்குவதற்கு முடியாது என அரச மருத்துவர் சங்கம் (Government Medical Officers Association – GMOA) மறுக்கிறது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு Clinical Training – மருத்துவப் பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக அவிஸ்ஸாவெல்ல அரசாங்க வைத்தியசாலை ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டது. இதனை அரச மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்ததுடன் பின்னர் மாலெபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) சைட்டம் கல்லூரி மாணவர்கள் Clinical Training – மருத்துவப் பயிற்சி எடுத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மாலெபே நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலையில் பயிற்சிக்கான வைத்தியசாலையொன்றில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச நோயாளிகள் இல்லை என்கிற காரணத்தினால் மாகாண வைத்தியசாலைகளில் Clinical Training – மருத்துவப் பயிற்சி பெற்றுக் கொள்ளும் பொருட்டு மேல் மாகாண சுகாதார தினைக்களத்துடன் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி 2011 ல் ஓர் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது.

மருத்துவர்களின் தேவைக்கு தீர்வில்லை

இலங்கை சுகாதார அமைச்சகத்தின் கீழ் சுமார் பதின் ஏழாயிரம் (17000) மருத்துவர்கள் சேவையாற்றி வருகிறார்கள். நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 1350 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தான் நாட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

நோயாளிகளின் தேவைக்கேற்ப்ப மருத்துவர்களின் தேவை இலங்கையின் இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. ஒரு வளர்ந்த நாட்டில் குறைந்தது 500 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற ரீதியில் காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையின் நிலை அபாயகரமானதாக உள்ளது. மருத்துவர்களின் தேவை விஷயத்தில்.

இலங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கற்று வருடத்திற்கு சுமார் 1200 மருத்துவர்கள் MBBS பட்டம் பெற்று வெளியாகிறார்கள். வெளிநாடுகளில் சென்று படித்து மருத்துவ பட்டம் பெருவோர் சுமார் 350 க்கு உட்பட்டவர்கள் இருக்கிறார்கள். வருடத்திற்கு குறைந்தளவில் 2500 மருத்துவர்களாவது உருவாக்கப்பட வேண்டிய தேவையில் இலங்கை காணப்படுகிறது. ஆனால் அரச மற்றும் வெளிநாட்டு கல்லூரிகளின் கற்று மருத்துவர்களாக வெரும் 1500 பேர்கள் தான் சேவைக்கு இணைகிறார்கள்.

திறமையான மாணவர்களுக்கும் இடமில்லை என்பது பெரும் பிரச்சினை

பல்கலைக் கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை என்பது உயர்தரப் பெறுபேறுகளின் (GCE A/L Result) அடிப்படையாகவே நடைமுறைப்படுத்தப் படுகிறது. 2011ல் மாத்திரம் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் (Bio Science) சுமார் அறுபதாயிரம் (60000) மாணவர்கள் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றினார்கள். இவர்களின் 1500 க்கும் குறைவான மாணவர்களே பல்கலைக் கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இது வெரும் 2.5 வீதம் மாத்திரம் தான்.

மருத்துவத் துறையில் பல்கலைக் கழக பட்டப்படிப்பை அரச பல்கலைக் கழகங்களில் பெற்றுக் கொள்வதற்கு வின்னப்பித்து சந்தர்ப்பம் கிடைக்காதவர்களில் பலர் மூன்று பாடங்களிலும் A சித்தியை பெற்றவர்கள்.

மூன்று பாடங்களிலும் A சித்தியை பெற்றுக் கொண்டும் பல்கலைக் கழக அனுமதி கிடைக்க வில்லை என்பது இவர்களின் A சித்தியை அரசு ஏற்றுக் கொள்ள வில்லை என்பதோ, அல்லது வேறு காரணங்களோ அல்ல. மாறாக இவர்களை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடங்களில் இடமில்லை என்பதேயாகும்.

மருத்துவர்கள் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. அதனை நிவர்த்தி செய்யும் அளவுக்கு கல்வித் தகுதியுள்ள உயர் தரப் பரீட்சையில் மூன்று பாடத்திலும் A சித்தி எய்திய மாணவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவக் கல்வியை போதிக்கும் அளவுக்கான பல்கலைக் கழக வசதி வாய்ப்பு அரச பல்கலைக் கழகங்களில் இல்லை.

உள்நாட்டு மருத்துவ பீடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்

மருத்துவர்களின் தேவையை அதிகரிப்பதற்காக இலங்கை அரசு சில முயற்சிகளை மேற்கொண்டாலும் அது போதிய முயற்சியாக அமையவில்லை. இலங்கையில் மருத்துவ பல்கலைக் கழக அனுமதி கிடைக்காமல் வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கென அரசு சார்பில் சுமார் 02 பில்லியன் ரூபாய்கள் வருடத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இலங்கை மருத்துவர் கவுன்சில் (SLMC) சார்பில் சுமார் 232 வெளிநாட்டு மருத்துவ பல்கலைக் கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் படித்து பட்டம் பெற்று வருபவர்களை இலங்கை மருத்துவப் பணியில் மருத்துவ கவுன்சில் இணைத்துக் கொள்ளும்.

அதே போல் இலங்யையில் மருத்துவம் படிக்கும் ஒரு மாணவனுக்கு சராசரியாக 20 மில்லியன் ரூபாவை அரசு செலவு செய்கிறது. இவ்வளவு செலவுகள் அரசு சார்பில் செய்யப்பட்டும் போதிய மருத்துவர்களை உருவாக்க முடியாதுள்ளதுடன், உருவாக்கப்படும் மருத்துவர்களிலும் ஒரு சாரார் மாத்திரமே திறமையானவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.

கல்வி அமைச்சு சார்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு உள்நாட்டிலேயே அதிகப்படியான அரச மருத்துவ பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டால் அதிகமான மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டில் சென்று படிக்க வசதியற்ற மாணவர்களுக்கும் தீர்வாக இது அமைந்து விடும்.

தனியார் பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு மாணவன் சராசரியாக குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் தனது படிப்புக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. இவ்வளவு செலவு செய்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு SLMC – SRI LANKA MEDICAL COUNCIL அனுமதி கொடுக்காமல் இருப்பதும், இதனை காரணமாக முன்வைத்து Clinical Training – மருத்துவப் பயிற்சி வழங்குவதற்கு முடியாது என அரச மருத்துவர் சங்கம் (Government Medical Officers Association – GMOA) மறுப்பதும் நீதிக்கு விரோதமானதாகும்.

சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவனுக்கு அரச கல்லூரிகளிலும் அனுமதியில்லை. தனியார் கல்லூரியில் ஒரு கோடி வரை செலவு செய்து படித்தால், அதன் பின்னர் மருத்துவப் பயிற்சியைக் கூட அரசு சார்பில் அவனால் பெற முடியாது என்றால் எங்கு செல்வது? யாரிடம் முறையிடுவது?

கல்வி வளர்ச்சிக்கு அரசு கூடிய கவனம் செலுத்தினாலும் போதிய இட வசதி அரச பல்கலைக் கழகங்களில் இல்லாத காரணத்தினால் அதனை நிவர்த்தி செய்யும் விதமாக தனியார் கல்லூரிகளுக்கு உரிய அனுமதியை முறைப்படி அரச வழங்குவது முக்கியமானதொரு தீர்வாக இந்தப் பிரச்சினைக்கு அமையக் கூடும்.

இந்தியா போன்ற நாடுகளில் இருப்பதைப் போலல்லாமல் தனியார் கல்லூரிகள் சட்ட வரை முறைகள் முறையாக பின்பற்றும் படி அமையப் பெருவதோடு, சட்டங்கள் சரியான முறையில் பின்பற்றப்படவும் வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கும் அதே வேலை, அவற்றை சட்ட ரீதியாக கண்காணிப்புக்கு உட்படுத்தும் போது தவறுகள் நடைபெறுவதை தவிர்க்க முடியும்.

இலவசக் கல்வி வேறு, தனியார் கல்லூரிகள் என்பது வேறு

தனியார் கல்லூரிகளுக்கு அனுமதியளித்தால் இலவசக் கல்வி இல்லாமலாக்கப்படும் என்கிற ஒரு பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் பல்கலைக் கழக மாணவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மூலமே இந்தக் காரணத்தை முன்வைத்து சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு கண்ணோட்டமாகும்.

தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது இலவச கல்விக்கு எதிரானது என்ற வாதம் சரியாக இருப்பின் அது ஆரம்பம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். LKG, UKG யில் ஆரம்பித்து சர்வதேச பாடசாலைகளுக்கு தடை கொண்டுவரப்படல் வேண்டும். அதனைத் தொடர்ந்தே தனியார் பல்கலைக் கழகங்களுக்கு தடையேற்படுத்த வேண்டும். அதை விடுத்து சைட்டம் கல்லூரிக்கு மாத்திரம் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது முறையான எதிர்ப்பு அல்ல.

இலங்கையின் இலவச கல்வியை நடைமுறைப் படுத்துவதற்காக அரசு சார்பில் ஒதுக்கப்படும் பெரும் நிதித் தொகை பல வழிகளிலும் வீனடிக்கப்படுகிறது. இதுவும் எதிர்காலத்தில் இலவசக் கல்வி முறையை பாதிக்கும் இவற்றை இப்போதே சரி செய்ய வேண்டும். இது போல் உண்மையில் இலவச கல்வியை பாதிக்கும் திட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு அரச பல்கலைக் கழகங்களிலும் படிப்பதற்கு போதிய இடமில்லாத போது தனியார் கல்லூரிகள் அந்த வாய்பை ஏற்படுத்திக் கொடுத்தால் அதனை சட்ட ரீதியாக முறைப்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வந்து குறித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதே அரச மற்றும் அனைத்துத் தரப்பினரினதும் கடமையாகும்.

சைட்டம் கல்லூரியை ஆதரித்த உயர் நீதி மன்றம்

சைட்டம் கல்லூரிக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்ற அதே வேலை. குறித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சைட்டம் கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு SLMC சார்பில் அரச மருத்துவ மனைகளில் Clinical Training – மருத்துவப் பயிற்சி வழங்க வேண்டும் எனக் கூறி மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் சைட்டம் மாணவர்கள் சார்பில் அடிப்படை மனித உரமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

(SC FR NO 208/2014) என்ற இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட குறித்த வழக்கில் தீர்பளித்த நீதி மன்றம் முன்னால் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் பிரகடனம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்படி சைட்டம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு MBBS பட்டம் வழங்கும் தகுதி சைட்டமுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு SLMC சைட்டம் கல்லூரி மாணவர்களை உள்வாங்க வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதி மன்றமும் சைட்டம் கல்லூரி மாணவர்களுக்கு SLMC சார்பில் அரச மருத்துவ மனைகளில் Clinical Training – மருத்துவப் பயிற்சி வழங்க வேண்டும் என தெளிவாக தெரிவித்துள்ள பின்னரும் ஆர்பாட்டங்கள் நடத்துவதின் மூலம் எதிர்ப்பை வெளியிடுவது என்பது முறையானது அல்ல.

அத்துடன் இந்த ஆர்பாட்டங்களினால் கல்வி ரீதியாக பாதிக்கப்படுவது சைட்டம் மாணவர்கள் மாத்திரமன்றி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அரச பல்கலைக் கழக மாணவர்களும் தான் என்பதையும் நாம் புரிந்து கொள்வதுடன், தனியார் கல்லூரி என்பதற்காகவே எதிர்க்காமல் அதன் நியாயத்தை புரிந்து கொள்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும் செயலாகும்.

-MFM

1,075 total views, 4 views today