LATEST
Home » குடும்பவியல் » பெண்கள் » சர்வதேச மகளிர் தினம் – ஓர் இஸ்லாமிய அலசல்

சர்வதேச மகளிர் தினம் – ஓர் இஸ்லாமிய அலசல்

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்களைப் போல் பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. இதில் பெண்களுக்கான வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்பிண்ணனியிலிருந்தே சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்படுகின்றது.

மகளிர் தினம் என்று ஒரு நாளைக் குறிவைத்து பெண்களை நினைவுபடுத்தி அத்தினத்தைக் கொண்டாடுவதால் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது அல்லது கிடைத்துவிடும் என நினைப்பது அறியாமையாகும். ஏனென்றால் உலகின் பல பாகங்களில் இந்த நிமிடம் வரை பல இலட்சக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு உரிமையை இழந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பாவில் பெண்கள் மனிதப் பிறவிகளா? அவர்களுக்கு உயிர் உண்டா? என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, ஆனால் இஸ்லாமிய மார்க்கம் 6ம் நூற்றாண்டிலேயே அதாவது 1435 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் பொறுப்புக்கள் பற்றி பேசி பெண்களும் ஓர் உயரிய படைப்பு என்பதை நிரூபித்துள்ளது.

பெண்களுக்கான உரிமைகளை வழங்கிய இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சில கருத்துக் குருடர்கள் இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றும் முஸ்லிம் சமூகம்தான் பெண்களை அடக்கி ஆள்;கின்றார்கள் என்றும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னால் பெண்களை மற்ற சமூகத்தினர் எவ்வாறு நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று புரிந்துகொள்வதும் இஸ்லாம் அவர்களுக்கு எத்தகைய உரிமைகளை வழங்கியது என்பதை அறிந்திட இலகுவாக இருக்கும். அதனால் உலக சமூகங்களில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை முதலில் நோக்குவோம்.

பன்மை சமூகங்களில் பெண்களின் பரிதாப நிலை

இந்தியர்கள்

பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கணவன் மரணித்துவிட்டால் அவனோடு சேர்த்து அவனது மனைவியையும் எறித்து விடுவார்கள். இதற்கு உடன் கட்டை ஏறுதல் எனப்படுகின்றது ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி; கணவனை இழந்து விட்டால் அமங்கலி என்று கூறி பெண்களை வதை செய்கின்ற கொடுமை இந்திய நாட்டில் தற்போதும் சில பகுதிகளில் நடைபெறுகிறது.

ஆங்கிலேயர்

19 ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயரின் பொது சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை அவள் அணியும் ஆடை முதல் எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக்கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.

பிரேஞ்ச்

பிரேஞ்சு நாட்டவர் 1586 ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா? இல்லையா? என்று ஆய்வு செய்து முடிவு எடுக்க ஒரு சபையை நியமித்தனர்.

யூதர்கள்

யூதர்கள் பெண்களை சாபத்திற்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர். யூத மதம் மிகவும் மோசமாக பெண்களை நோக்குகிறது.

இப்படியே பெண் அடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு மேலோங்கிக் கொண்டிருந்தது.

இஸ்லாத்தின் வருகையும் பெண்ணினம் மீதான ஆண் ஆதிக்கமும்

இஸ்லாம் தோற்றம்பெற்ற அரேபியப் பகுதியில் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன் பெண்கள் துற்சகுனமாக கருதப்பட்டதோடு பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கப்பட்ட நிலமையும் காணப்பட்டது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை முழு மனித சமுதாயத்திற்கும் அது ஒரு அருள் என்பதுடன்; ஒப்பீட்டு ரீதியில் அது பெண் இனத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது மாபெரும் உண்மையாகும்.

நபி (ஸல்) அவர்களின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்க தயங்கமாட்டார்.

அன்று பெண் என்பவள்

ஆணின் அடிமை

அவனின் சிற்றின்பப் பொருள்

ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்

குடும்பத்தின் அவமானச் சின்னம்

ஒரு சுமை

மனிதப் பிறவியாகக் கருதப்படாதவள்

எத்தகைய உரிமைகளையும் பெற தகுதியற்றவள்

என்றெல்லாம் கருதப்பட்டாள்.

பெண்ணினம் இவ்வாறு கேவலமாகவும் மிக இழிவாகவும் கருதப்பட்டும் நடத்தப்பட்டும் வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதுச் செய்தியைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி பொதுவாக மனித விடுதலையை இலக்காகக் கொண்டிருந்தது.

பெண் குழந்தைகளை பீடைகள் என்று முத்திரை குத்திய அரபுக் கூட்டத்தினரை குர்ஆன் இவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

பெண்களுக்கு உலகில் கொடுக்க வேண்டிய உரிமைகள் பற்றி நீண்ட ஓர் அத்தியாயத்தை அன்நிஸா என்று பெயரிட்டு அத்தனை உரிமைகளையும் பட்டியலிட்டு குர்ஆன் காண்பிக்கின்றது.

கல்வி

பெண்கள் கல்வி கற்க வேண்டும் அறிவை வளர;த்துக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பம் முதல் அடித்தளத்தை இஸ்லாம் அமைத்துக் கொடுத்தது.

உழைக்கும் உரிமை

இஸ்லாம் பெண்களுக்கு தேவைப்பட்டால் உழைக்கும் உரிமையை வழங்கிய உயர்ந்த மார்க்கமாகும். வேலைக்குச் செல்லும் நிர;பந்தம் ஏற்பட்டால் கூட ஆடை முறையை இஸ்லாம் காட்டிய வழியில் அவர;கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மண மகனைத் தெரிவு செய்யும் உரிமை

ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. தன் மனதுக்குப் பிடிக்காத மணமகனை நிராகரிப்பதற்கும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு. ஆண் பெண் இருபாலாரிடமும் சம்மதம் பெற்ற பிறகுதான் திருமணம் செய்து வைக்க முடியும் என்ற சட்டவடிவு இஸ்லாத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை.

விவாகரத்து உரிமை

கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை வாழ்க்கைப்பட்டு விட்டோம் என்ற காரணத்தினால் அவனோடுதான் வாழ்ந்து மடிய வேண்டும் என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை. கணவனைப் பிடிக்காவிட்டால் அவனை விட்டும் பிரிய இஸ்லாம்; பெண்ணுக்கு உரிமை வழங்குகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்;: ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத் தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன ;“என்று கூறினார். அப்போது, “இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?“ என்று கேட்டார்கள் அவர், “ஆம் (தந்து விடுகிறேன்)“ என்று கூறினார். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!“ என்று கூறினார்கள்.

புஹாரி: 5273

மறு மணம்

கணவனை இழந்த பெண்களுக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. விதவைகள் மறுமணம் செய்துகொள்ளலாம் என்று ஆணித்தரமாக உரிமை வழங்கிய ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

சொத்துரிமை

பெற்றோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நிச்சயமாக பெண்களுக்கும்; பங்குண்டு என்று ஆணித்தரமாக முதன் முதலில் இந்த உலகத்திற்கு உரத்த குரலில் உரிமை கீதம் பாடிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

அல்குர்ஆன் 4:7

இத்தனை உரிமைகளையும் இஸ்லாம் சொல்லும் வழியில் முறையாகப் பெண்கள் பயன்டுத்தினால் மட்டுமே அதற்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் உண்டு. எனவே பெண்கள் அவர்களது உரிமைகள் என்ன என்பதை குர்ஆன் சுன்னாவிலிருந்து படித்து அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுடன் மகளிர; தினம் என்ற பெயரில் வெரும் கொண்டாட்டங்களையும் கழியாட்டங்களையும் நிகழ்த்துவதினாலும் பெண்களின் புகழ் பாடுவதினாலும் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடப்போவதில்லை. இஸ்லாம் தான் பெண்களுக்கான உரிமை கொடுக்கும் உன்னத மார;க்கம் என்பதை புரிந்து இஸ்லாம் வழி நடக்க முனைவோமாக!

523 total views, 1 views today