LATEST
Home » கட்டுரைகள் » சர்வதேச அரசியல் » சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்திய சவுதி அரசு

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்திய சவுதி அரசு

நீதி என்பது எதுவென்றால் நீதீ தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் விதமானதே நீதி. இதுதான் நீதியின் அடிப்படையாகும். அதனால் தான் குற்றவாளிகள் இலேசாக தப்பித்துக் கொள்ளும் தற்கால சட்டங்களை “சட்டம் ஒரு இருட்டறை” என்று சொல்லும் வழமை உலகம் முழுவதும் இருப்பதைப் பார்க்கிறோம்.

சட்டம் சாமானியக்கு மாத்திரமே அதிகாரம் படைத்தவர்களுக்கில்லை என்பதே உலகின் அனைத்து நாட்டு சட்டங்களிலும் எழுதப்படாத விதியாக இருக்கிறது. மனித சட்டங்கள் ஓட்டைக் கொண்டதாகவும், குற்றவாளி தப்பித்துக் கொள்ளும் விதமானதாகவும் தான் காணப்படும் அதனால் தான் அந்த ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் குற்றவாளிகள் கூட தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், இறைவனின் சட்டத்தில் ஓட்டை இல்லை. தப்பித்துக் கொள்ளும் தந்திரம் செய்ய முடியாது. இறைவனின் சட்டத்தை நடைமுறைப் படுத்தும் போது அதிகாரத்தினால் அதனை தடுப்பதற்கு சட்டத்தில் ஓட்டைகள் இல்லை. நமது நாட்டு சட்டங்களை போன்று குற்றவாளி கருணை மனு கொடுத்தான் என்று ஜனாதிபதியோ, பிரதமரோ மண்ணிப்பு வழங்க முடியாது. சுதந்திர தினத்தின் பெயரால் குற்றவாளிகளுக்கு விடுதலை கொடுக்க முடியாது.

இதுவே இறை சட்டத்திற்கும் மனித சட்டங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும்.

மனித சட்டங்கள் ஆளுக்கேற்ற வகையில் வலைய, வலைக்க முடியும். இறைச் சட்டத்தை இறைவனின் தூதர் கூட வலைக்க முடியாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதனை தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்’ என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?’ என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள், ‘உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் எனப் பிரகடனம் செய்தார்கள்.

நூல் : புகாரி 3475, 3733, 4304, 6787, 6788

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் அன்பு மகள் பாத்திமா திருடினால் கூட சட்டம் வலையாது, நீதி திரும்பாது என்பதை மேற்கண்ட செய்தி இவ்வுலகுக்கு தெளிவாக பாடம் புகட்டுகிறது.

நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளையை உலகுக்கு இன்னொரு முறை உணர்த்திக் காட்டியுள்ளது சவூதி அரேபிய அரசாங்கம்.

சட்டம் அனைவருக்கும் சமனாகும், சர்வதேசத்திற்கு உணர்த்திய சவுதி அரசு

சவூதி அரேபியா; அரபு தேசத்தின் இதயம். உலக வல்லரசுகள் கூட கொஞ்சம் சிந்தித்தே மூக்கை நுழைக்க நினைக்கும் நாடு. பெற்றோலிய வளம் கொட்டிக் கிடக்கும் முக்கிய தேசம். உலக முஸ்லிம்கள் தம் இறைவனை தொழும் போது முன்னோக்கும் புனித கஃபதுல்லாஹ் அமைந்த பூமி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாயல் அமைந்த முக்கிய தேசம். இப்படி பல வகையான சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டதே சவூதி அரேபியாவாகும்.

அரபு நாடுகளின் தலைமையாக உலக நாடுகளினால் பார்க்கப்படும் சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னராக இருப்பவர் ஸல்மான்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் பல அதிரடியான செயல் திட்டங்களை முன்னெடுத்து வருபவர் சல்மான்.

சவுதிக்கு வேலைக்கு சென்று, வேலை செய்தும் சம்பளம் இல்லாமல் தவித்த ஆயிரக் கணக்கானவர்களின் சம்பளப் பாக்கியை உடனே கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பின் மூலம் ஆரம்பித்த தனது அதிரடி வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

1935ம் ஆண்டு பிறந்த மன்னர் ஸல்மான். தனது சகோதரர் மன்னர் அப்துல்லாஹ்வின் மரணத்தை தொடர்ந்து சவுதியின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். 19 வயது முதல் நிர்வாக பொறுப்புகள் வகித்து வந்த சல்மான் மன்னராக முடி சூடிக் கொண்ட போது அவருக்கு வயது 79 ஆகும்.

கடந்த பல்லாண்டுகளாக பிராந்திய நாடுகள் விஷயத்தில் பல சந்தர்பங்களில் மௌனம் காத்து வந்த சவுதி அரேபியா, சல்மான் அவர்களின் ஆட்சிப் பொறுப்பேற்பின் பின்னரே பிராந்திய நாடுகள் விஷயத்தில் மௌனம் கலைத்தது எனலாம். யெமன் மீதான சவுதியின் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இதற்கு உதாரணமாகும்.

குர்ஆனிய சட்டமே நடைமுறை படுத்தப்படும் “என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபியவர்கள் சொன்னார்கள். நபியவர்களின் வார்தைக்கு இணங்க எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று தனது பதவியேற்பிலேயே மன்னர் ஸல்மான் அறிவித்ததைப் போல், தற்போது தன் குடும்பத்தை சேர்ந்தவருக்கே மரண தண்டனை நிறைவேற்றி உலகுக்கு நீதியான சட்டத்தை நிலை நாட்டிக் காட்டியுள்ளார் கிங் ஸல்மான் என்று சிலாகிக்கிறது “விகடன்” பத்திரிக்கை

ஆம், சவூதி அரேபியாவின் ஒரு சிறு குறை தென்பட்டால் கூட உலக ஊடகங்களின் விவாதக் களமாக அதனை ஆக்குவதும், விமர்சிப்பதும், இஸ்லாமிய சட்டத்தினை குறைபடுத்த எத்தனிப்பதும் உலக ஊடகங்களின் வழமையாக இருக்கும் நிலையில் மன்னர் ஸல்மானின் இந்த செயல்பாட்டை விகடன் போன்ற பத்திரிக்கைகள் மனம் விட்டு சிலாகித்திருப்பது பாராட்டுக்குறியதே!

குடும்ப உறவாக இருந்தாலும் சட்டம் வலையாது, நீதி சாகாது

சவுதியின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் துர்க் பின் சவூத் அல்-கபீர் கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் இன்னொரு குழுவுக்கும் ஏற்பட்ட ஒரு மோதலில் ஆதில் பின் சுலைமான் பின் அப்துல் கரீம் அல்முஹைமீத் என்பவரை சுட்டுக் கொலை செய்தார் கபீர்.

இது தொடர்பான வழக்கு விசாரனை சவூதி அரேபியாவின் பொது நீதி மன்றத்தில் நடைபெற்றது. இதில் இளவரசர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்ன சவூதி அரேபியாவின் உயர் நீதி மன்றமும், மேல் முறையீட்டு நீதி மன்றமும் இளவரசரின் குற்றத்தை  உறுதி செய்தன. இதனடிப்படையில் இளவரசர் கபீருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொலை குற்றம் உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் 18.10.2016 அன்று இளவரசர் துர்க் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார். இந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 134 வது நபர் இளவரசர் கபீர் ஆவார்.

இது முதல் முறையல்ல..

சவூதிய அரச குடும்பத்தவர்களுக்கு தண்டனை வழங்குவது என்பது இது முதன் முறையல்ல என்பதை இங்கு கவனிக்க வேண்டும். 1975ம் ஆண்டு சவூதி அரேபியாவின் மன்னராக இருந்த மன்னர் பைசலை கொலை செய்ய குற்றத்திற்காக இளவரசராக இருந்த பைசல் பின் முஸைத் பொது இடத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவருடைய மரண தண்டனை பொது இடத்தில் நடைபெற்ற காரணத்தினால் அப்போது சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனை நேரடியாக பார்த்ததாக செய்திகள் கூறுகின்றன.

அந்தத் தொடரில் தற்போது இளவரசர் கபீருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கபீருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் இது வரை எந்த விதமான புகைப்படங்களும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

மன்னர் பைசலை கொலை செய்த குற்றச்சாட்டில் இளவரசர் பைசல் பின் முஸைதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை கூட உறவுக்காரரை கொலை செய்ததற்காக இப்படி செய்தார்கள் என்று விமர்சிப்பதற்கு ஒரு சிறு வாய்புள்ளது. ஆனால் தற்போது இளவரசர் கபீருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் அது போன்ற விமர்சனங்கள் கூட எழுப்பப்பட முடியாது. காரனம் அரச குடும்பத்தை சாராத ஒருவரை கொலை செய்ததற்காகவே கபீர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நீதியை நிலை நாட்டுவதாக உலகத்திற்கு சொல்லிக் கொண்டு சட்டத்தை வலைத்து, தேவைக்கு ஏற்ப சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் இவ்வுலக ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சட்டம் எதுவோ அதனை நடைமுறைப் படுத்திய மன்னர் சல்மான் பாராட்டுக்கு உரியவராகவே பார்க்கப்படுகிறார்

MISc

1,463 total views, 1 views today