LATEST
Home » கட்டுரைகள் » சர்வதேச அரசியல் » ஈராக் – சதாம் முதல் சில்காட் வரை

ஈராக் – சதாம் முதல் சில்காட் வரை

போர்களின் தேசம்,

அமைதியின்மையின் பிறப்பிடம்,

தீவிரவாதத்தின் நிரந்தர முகவரி

போன்ற இன்னும் பல அடைமொழிகளினால் அழைக்கப்படும் தேசம் ஈராக்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பலம் பொருந்திய நாடாகவும், நாகரீகத்தின் தொட்டிலாகவும் வியந்து பாராட்டப்பட்ட ஈராக், தற்போது அல்-காயிதா ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளின் தொட்டிலாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும், அண்டை நாடுகளின் வளர்சிக்கு போட்டியாகவும், கட்டமைப்பு சிதராத அரசாகவும் திகழ்ந்த ஈராக்கிய ஸதாம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு சுமார் பத்தாண்டுகள் தாண்டி விட்டன.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்க நேசப்படைகளுடன் இணைந்து பிரித்தானியப் படைகள் ஸதாம் ஹுஸைனின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியமை பற்றிய ஆய்வரிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

ஸதாம் – இராணுவம் + சர்வதிகாரம்  = நிலையான ஆட்சி

ஸதாம் ஹுஸைன் தலைமையில் செயல்பட்ட ஈராக்கிய ஆட்சி முறை இராணுவ ஆட்சியாக வர்ணிக்கப்பட்டது. மட்டுமன்றி சர்வதிகாரியாக ஸதாம் செயல்படுகிறார் என்ற பாரிய குற்றச்சாட்டும் ஸதாம் ஹுஸைன் மீது சர்வதேச நாடுகளினால் முன்வைக்கப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் நிலையான ஆட்சியை குளைந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார் ஸதாம்.

ஸதாம் யதேச்சதிகார அரசை (Authoritarian Government) நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்த ஸதாம் ஹுஸைன் ஈரானுக்கு எதிராக 1980 முதல் 1988 வரையிலும் 1991ல் குவைத்துக்கு எதிராகவும் போர் தொடுத்தார்.

தனது ஆட்சிக்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் கட்டுப்பாட்டை ஏற்க மறுத்தது மட்டுமன்றி, பொருளாதாரத் தடையை மீறி நாட்டை வளர்சிப் பாதையில் இட்டுச் சென்றார் ஸதாம் ஹுஸைன்.

1979 ஜுலை 16 முதல் 2003 ஏப்ரல் 09 அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈராக் ஆட்சியை கைப்பற்றும் வரை ஈராக்கின் அதிபராக கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஈராக்கின் அதிபராக ஸதாம் ஹுஸைன் செயல்பட்டார்.

தமது கட்டுப்பாட்டை ஏற்க மறுக்கும் ஸதாம் ஹுஸைனுக்கு எதிராக பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் ஸதாமிடம் இருப்பதாக வீனான குற்றச்சாட்டை எழுப்பி ஈராக் மீதான தனது அவசர தாக்குதலை அமெரிக்காவும் அதன் நேர நாடுகளும் “பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் படைகளின் யுத்தம்” என்ற பெயரில் தொடங்கின.

2003 மார்ச் மாதம் 19ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஸதாமுக்கு எதிரான போரின் போது ஸதாம் ஹுஸைன் தலைமையிலான ஈராக்கின் ஆட்சி கவிழ்கப் பட்டது. 2003 டிசம்பர் 13 அன்று திக்ரித் நகருக்கு வெளியில் ஸதாம் அமெரிக்க படைகளினால் கைது செய்யப்பட்டார்.

2006ம் ஆண்டு நவம்பர் 05ம் தேதியன்று ஸதாமுக்கு அமெரிக்க அடிமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 2006 டிசம்பர் 26ம் தேதி ஸதாமின் மேன் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் ஸதாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்டார்.

உண்மையை வெளிப்படுத்திய சில்காட் அறிக்கை

ஸதாம் ஹுஸைனுக்கு எதிரான ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானிய படைகளும் ஈடுபட்ட காரணத்தினால் சுமார் 200க்கும் அதிகமான பிரித்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

Sir ஜான் சில்காட்

Sir ஜான் சில்காட்

ஈராக் போரில் கொல்லப்பட்ட பிரித்தானிய படையினரின் உறவினர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக Sir ஜான் சில்காட் என்பவரின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு, ஈராக் போரில் பிரித்தானிய படைகள் ஈடுபட்டமையின் நியாயத் தன்மை ஆராயப்பட்டது.

2001 முதல் 2009 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பிரிட்டன் அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.

சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரித்தானிய அரசாங்கம் 2003ம் ஆண்டில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சில்காட் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

தவறான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக Sir ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அப்போதைய பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இராக் போருக்கு பிரிட்டன் செல்ல முடிவெடுத்ததன் பின்னணி, போருக்கு செல்வதற்கு படைத்துருப்புக்கள் முறையாக தயார் படுத்தப்பட்டார்களா?, மோதல் எவ்வாறு நடைபெற்றது?, தீவிரவாத வன்முறை நிலவிய அக்காலகட்டத்தில் இதன் பின்னர் என்ன திட்டம் நடைமுறையில் இருந்தது ஆகியவை இவ்வறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

Sir ஜான் சில்காட் தலைமையில் நியமிக்கப்பட்ட ஈராக் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்யும் குழு தனது அறிக்கையை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கையை தாமதப் படுத்தியிருக்கலாம்

அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே, இராக் மீதான படையெடுப்பில் பிரிட்டன் இணைந்து கொண்டது. அக்கால கட்டத்தில் ராணுவ நடவடிக்கை என்பது கடைசி வழியாக இருக்கவில்லை.

160707072848_iraqwar_512x288_afp_nocreditராணுவ நடவடிக்கை என்பது பிற்காலத்தில் தேவையானதாக அமைந்திருக்கலாம். ஆனால், மார்ச் 2003ல் அப்போதைய ஈராக்கின் அதிபர் ஸதாம் ஹுசைனிடம் இருந்த ஆயுதங்கள் பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை. சதாம் ஹுசைனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கையாளப்பட்டு, சில காலம் அவை தொடர்ந்திருக்கலாம். பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள், இராக்கில் ஐநா ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு தொடர ஆதரவு தெரிவித்திருந்தனர்.

நிலைமை இவ்வாறிருந்தும் இவற்றை பொருட்படுத்தாமலேயே அமெரிக்கா தலைமையில் பிரித்தானியாவும் இணைந்து கொண்டு தாக்குதல் நடத்தியது.

சதாமிடம் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் இருந்தன என்பது நிரூபிக்கப்பட வில்லை

ஈராக் அதிபர் ஸதாம் ஹுஸைன் வைத்திருந்ததாகக் கருதப்பட்ட பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் தோற்றுவித்த ஆபத்து பற்றிய மதிப்பீடுகள் நியாயமற்ற முறையில் முன்வைக்கப் பட்டன.

பேரழிவை உண்டாக்கும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை, ஸதாம் ஹுசைன் தொடர்ந்து உருவாக்கி வந்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் உளவுத்துறை நிரூபிக்கவில்லை.

ஈராக் போரில் பிரித்தானியா ஈடுபட வேண்டும் என துள்ளியமாக எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

ஈராக் மீதான யுத்தத்தில் பிரித்தானியா பங்கெடுத்தமை பற்றி சட்ட ரீதியாக முறையான அனுமதி பெறப்பட வில்லை என சில்காட் அறிக்கை குறிப்பிடுகிறது.

The moment of the falling of Saddam's statue, with the help of the US Army.

பிரித்தானியாவின் ராணுவ நடவடிக்கைக்கு சட்ட அடிப்படை உள்ளதாக முடிவெடுக்கப்பட்ட சூழல்கள் திருப்தியளிப்பதாக இல்லை.

2003 மார்ச் 20ம் தேதியன்று ஈராக் படையெடுப்பு துவங்கியது. ஆனால், பிரிட்டன் அரசின் தலைமை வழக்கறிஞர் கோல்ட் ஸ்மித் அட்டர்னி ஜெனரல், பிரித்தானியாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஒரு பாதுகாப்பான சட்ட அடிப்படை வேண்டும் என்பது குறித்து மார்ச் 13ம் தேதி வரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை.

13ம் தேதியன்று தான் அவர் அது குறித்து கடிதமே எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்திற்கு மார்ச் 14ம் தேதியன்றே பிரி்த்தானிய பிரதமர் (டோனி பிலேயர்) அலுவலகம் அளித்த பதிலினை தவிர போரில் ஈடுபடுவது குறித்து எந்த முறையான ஆவணமும் இல்லை.

ஈராக் போரில் பிரித்தானியா ஈடுபடுவது குறித்து எந்த வகையில் துல்லியமான அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்பது தெளிவாக இல்லை.

போருக்கான இராணுவ தயாரிப்புகள் சரியாக இருக்க வில்லை

ஈராக் போர்ப் பணியில் அமர்த்தப்பட்ட பிரித்தானியாவின் மூன்று இராணுவப் படைப்பிரிவுகளையும், போருக்கு முறையாக தயார் செய்ய மிகவும் குறைவான நேரமே இருந்தது. இது குறித்த ஆபத்துக்கள் முறையாக இனம் காணப்படவில்லை அல்லது இது குறித்து அமைச்சர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இதனால், ஆயுத உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

கடந்த 2003 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில், இராணுவ கவச வாகனங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவி பெறுதல் ஆகிய முக்கிய திறன் பகுதிகளில் ஏற்பட்ட இடைவெளிகளால் பல இடர்களை ஈராக்கில் இருந்த பிரித்தானிய படையினர் சந்தித்தனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சக துறையில் இருந்த எந்த நபர், இத்தகைய இடைவெளிகளை அடையாளம் காண்பது மற்றும் இணைப்பது ஆகிய பொறுப்புகளில் இருந்தார் என்பது போதுமானளவு தெளிவாக இல்லை.

ஈராக் மீதான போரில் பிரித்தானியா எந்த ஒன்றையும் சாதிக்க வில்லை

ஈராக் மீதான அமெரிக்காவின் போரில் பங்கெடுத்ததின் மூலம் பிரித்தானியாவுக்கோ, அல்லது ஈராக் மக்களுக்கோ எந்தவொரு நன்மையும் ஏற்பட வில்லை என்கிறது சில்காட் அறிக்கை.

மிகவும் வெளிப்படையான எச்சரிக்கைகளுக்கு பிறகும், ஈராக் மீதான படையெடுப்பின் விளைவுகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. சதாம் ஹுசைன் அகற்றப்பட்டப் பின்னர், இராக்கில் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் மற்றும் புணரமைப்பு பணிகளுக்கு திட்டமிடல் மற்றும் அதற்கு தயார் ஏற்பாடுகள் செய்வது ஆகியவை முற்றிலும் போதுமானதாக இல்லை.

பிரித்தானிய அரசு ஈராக்கில் தனது நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது. ஈராக் போரினால் 200 க்கும் மேற்பட்ட பிரித்தானிய குடிமக்கள் உயிரிழந்துள்ளனர். ஈராக் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். 2009 ஜுலை மாதத்திற்குள், குறைந்தது 150,000 இராக்கியர்கள் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஈராக் யுத்தத்தின் மூலம் பிரித்தானிய கற்றுக் கொள்ள வேண்டிவை

தனது செல்வாக்கின் மூலம் இராக் போர் குறித்த முடிவுகளில் அமெரிக்காவினை கட்டுப்படுத்த முடியுமென்று டோனி பிளேர், தனது திறமையினை மிகவும் அதிகமாக மதிப்பிட்டுள்ளார் என்று சில்காட் அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான பிரிட்டனின் உறவுக்கு நிபந்தனையில்லாத ஆதரவு எதுவும் தேவைப்பட்டதில்லை. ஆனால் எவ்வித நிபந்தனையும் இல்லாமலேயே ஈராக் போரில் அமெரிக்காவுடன் பிரித்தானியா இணைந்துள்ளது.

எதிர்காலத்தில், அயல்நாட்டு விவகாரங்களில் பிரித்தானியாவின் எந்தவொரு ஈடுபாடும், அதன் அனைத்து அம்சங்களும் மிகவும் தீவிரமாகவும் கணக்கிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சவால்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னறே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்

சில்காட் அறிக்கையின் முடிவுகள் முழுமையாக செயல்படுத்தபட வேண்டியது மிகவும் அவசியமாகவும். என அறிவித்துள்ளது சில்காட் அறிக்கை தயார் படுத்தல் குழு.

http://www.bbc.com/tamil/global/2016/07/160707_chilcotreport_findings?ocid=socialflow_facebook

உலகில் உள்ள பெரும் பயங்கரவாதி டோனி பிலேயர் தான்

ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பில் எவ்வித தேவையுமின்றி தாமாக இணைந்து கொண்டது பிரித்தானியா. பிரித்தானியாவின் ஈராக் மீதான போர் இணைவினால் பிரித்தானியாவுக்கோ, அல்லது போரால் பாதிக்கப்பட்ட ஈராக் மக்களுக்கோ எவ்வித நன்மையும் ஏற்பட வில்லையென்றும், மாறாக இந்த போரினால் இரு நாட்டு மக்களுக்கும் இழப்புகள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் சில்காட் அறிக்கை தெளிவு படுத்தியுள்ளது.

ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிலேயர்இந்நிலையில், ஜான் சில்காட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வின் முடிவு பற்றி ஈராக் போரில் ஈடுபட்டு உயிரிழந்த பிரித்தானிய படை வீரர்களின் உறவினர்களும், பாதிக்கப்பட்ட ஈராக் மக்களும் தெரிவித்த கருத்துக்களை பி.பி.சி உலக செய்தி சேவை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது.

இந்த உலகத்தில் ஒரு பயங்கரவாதி இருக்கிறார். அவர் பெயர் டோனி பிலேயர் என்பது உலகுக்கு தெரியும். அவர் தான் உலகத்தின் மோசமான பயங்கரவாதி.

டோனி பிலேயர் என் முன்னாள் வந்தால் “நீ ஒரு கிரிமினல் என்று கூறி, முகத்தில் காறி துப்புவேன் என்கிறார் ஒரு ஈராக் நாட்டு குடிமகன்.

அவர் மேலும் கூறும் போது “சதாம் ஆட்சி கொடுமையானதாக இருந்தாலும் கட்டுக் கோப்பான ஆட்சியாக அமைந்திருந்தது. ஒரு சதாம் போய் விட்டார் இன்று ஓராயிரம் சதாம்கள் உருவாகி விட்டார்கள். டோனி பிலேயர் என் முன்னாள் வந்தால் “நீ ஒரு கிரிமினல் என்று கூறி, முகத்தில் காறி துப்புவேன்.

ஈராக்கின் இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 2003ம் ஆண்டின் ஆக்கிரமிப்பே காரணம்.

2003ம் ஆண்டு ஆக்கிரமிப்புக்கு முன் ஜிஹாதிகள் ஈராக்கில் தாக்கப் படுபவர்களாக இருந்தார்கள். ஆக்கிரமிப்புக்கு பின் அல்காயிதாவின் தலைமையகமாக, சுவர்கமாக ஈராக் மாறி விட்டது என்கிறார்கள் ஈராக் மக்கள்.

ஸதாம் ஹுஸைன் தமது பேச்சுக்கு கட்டுப்பட வில்லை என்கிற ஒரே காரணத்திற்காக ஸதாம் மீது பயங்கரவாத முத்திரையை குத்தி, பேரழிவு ஆயுதங்கள் ஸதாமிடம் இருக்கின்றன என்ற போலியான குற்றச்சாட்டை சுமத்தி அமெரிக்காவும், பிரித்தானியாவும் தம் கூட்டுப் படைகளின் மூலம் கட்டுக் கோப்பான ஆட்சி நடைபெற்ற ஒரு நாட்டை தீவிரவாதத்தின் கோட்டையாக மாற்றி விட்டார்கள் என்பதே உண்மையாகும்.

-ரஸ்மின் MISc

1,481 total views, 1 views today