LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை » இலங்கை வெள்ளம் – மானுடமே வென்றது – ஆனந்த விகடன் இதழுக்கு பதில்

இலங்கை வெள்ளம் – மானுடமே வென்றது – ஆனந்த விகடன் இதழுக்கு பதில்

தலைப்பை சரியாக அமைத்து செய்தியை பொய்யாகத் தொகுத்த ஆனந்த விகடன்

இலங்கை வெள்ளம் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்ட பொய்யான செய்திகள் தொடர்பில் உணர்வு வார இதழில் வெளியிடப்பட்ட மறுப்பு ஆக்கம். – தொகுப்பு: ரஸ்மின் MISc

இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் தற்போது வடிய ஆரம்பித்துள்ள இவ்வேலையில் இனவாதம், பிரதேசவாதம் போன்ற குரோத எண்ணங்களும் குப்பையோடு குப்பையாக சேர ஆரம்பித்து விட்டது. 

வெள்ளம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாதிக்கப் பட்டவர்களுக்காக பலரும் உதவி செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையை ஆட்கொண்ட இந்த பெருவெள்ளத்தில் இலங்கை முஸ்லிம்கள் செய்த சேவை அளப்பரியது, எண்ணிலடங்காதது.

உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக் கணக்கான மக்களை காப்பாற்றிய பெருமை இலங்கை முஸ்லிம்களை சாரும் என்றால் அது மிகையல்ல.

ஆனால், வெள்ளம் ஏற்பட்டமை அதற்கு உதவி செய்தவர்கள், செய்யப்பட்ட உதவி போன்றவை தொடர்பாக 01.06.2016 அன்று ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள ஒரு ஆக்கம் முழு பூசனிக் காயை சோற்றுக்குள் மறைத்தல் என்ற முது மொழியை உண்மைப் படுத்துவதாக அமைந்துள்ளது.

பொய் + இனவாதம் + பப்லிசிட்டி = ஆனந்த விகடன்

ஊடகத் துறை என்பது மறைக்கப்பட்ட உண்மைகளைக் கூட நியாயத்தின் முன் நீதியாக கொண்டு வந்து நிறுத்தும் துறையாக இருக்க வேண்டுமே தவிர, தான் சார்ந்த அல்லது தான் நேசிக்கும் இனம் சார்ந்த செய்திகளை காசாக்கும் காகித தொழிற்சாலையாக அமையக் கூடாது. அப்படி செய்வது ஊடகத் துறையின் துறை சார் நம்பிக்கையை இல்லாமலாக்கும் செயலாக மாறி விடும்.

ஆனந்த விகடம் பத்திரிக்கை அதனைத் தான் செய்திருக்கிறது. பாரியதொரு பாதிப்பு வரும் போது அதனை வைத்து பத்திரிக்கை வியாபாரம் செய்யும் விபச்சார ஊடக தன்மையை வெளிக்காட்டியுள்ளது விகடன் குழுமம்.

பொய்யையும், இனவாதத்தையும் இணைத்து தனது பத்திரிக்கைக்கு தேவையான பப்லிசிட்டியை உண்டாக்க முனைந்திருக்கிறது விகடன்.

“மீண்டும் மானுடமே வென்றது” என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆரம்பத்திலேயே நீல நிறத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார்கள்.

குறிப்பு: இது மொழிப்பெயர்ப்பு கட்டுரையோ அல்லது இணையத்தில் மேய்ந்து திரட்டிய தகவல்களை கொண்டு கோர்த்த கட்டுரையோ அல்ல. மூன்று நாட்கள் இலங்கையின் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களிடம் உரையாடிய பின்னரே இதை எழுதுகிறேன்….

மூன்று நாட்கள் இலங்கையில் மழை பாதித்து வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு எழுதிய ஆக்கம் தான் இது, மாறாக இது இணையத்தில் மேய்ந்து திரட்டிய தகவல்களை கொண்டோ அல்லது மொழியாக்க ஆக்கமாகவோ எழுதப்பட வில்லை என்று முற்கூட்டிய அணை கட்டியுள்ளது விகடன்.

உண்மையில் இவர்கள் இலங்கையில் வெள்ளம் பாதித்த இடங்களில் வந்து பார்வையிட்டு குறித்த கட்டுரையை எழுதியிருந்தால் இது போன்ற இனத்துக்கு சாதகமான ஒரு ஆக்கத்தை கொண்டு வந்திருக்க முடியாது.

காரணம், இவர்களின் ஆக்கத்தில் இவர்கள் சொல்லியுள்ளதைப் போன்றதொரு நிலையை இவர்களினால் நிரூபணம் செய்ய முடியாது.

இடம் தெரியாமல் கதை விடும் ஆனந்த விகடன்

இலங்கையில், வெள்ளம் பாதித்த அவிசாவலை பகுதிக்கு இவர்கள் வந்தார்களாம். அந்தப் பகுதி சிங்களவர்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களும் அடர்த்தியாக வாழும் பகுதியாம்.

விகடன் கட்டுரையின் முதல் பொய்:

இவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பின் புற நகர் பகுதியான வெல்லம்பிடிய பகுதியை ஊடருத்து செல்லும் வீதியினூடாக சென்றால் அவிசாவலை என்ற இவர்கள் குறிப்பிடும் பகுதிக்கும் செல்ல முடியும்.

உண்மையில் பாரிய வெள்ளப் பெருக்க எங்கு ஏற்பட்டதோ அந்த இடம் வெல்லம்பிடிய என்றழைக்கப்படும் பகுதியாகும். ஆனந்த விகடம் குறிப்பிடும் அவிசாவலை என்ற பகுதியில் நாப்பாவல என்ற ஓர் இடத்தில் மாத்திரம் ஓரளவுக்கான வெள்ளம் ஏற்பட்டது அதுவும் பாரியளவிலான வெள்ளமல்ல.

ஆக மொத்தத்தில் இடமே தெரியாமல் கதை எழுதியுள்ளது விகடன் என்பது தெளிவான ஒன்றாகும்.

விகடன் கட்டுரையின் இரண்டாவது பொய் :

வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட பகுதியில் தமிழர்களும், சிங்களவர்களும், இஸ்லாமியர்களும் அடர்த்தியாக வாழும் பகுதியாகும்.

வெள்ளத்தினால் பாதிய சேதங்களை சந்தித்த வெல்லம்பிடிய, கொலன்னாவ, மெகட கொலன்னாவ, லன்சியாவத்தை, சேதவத்தை, கிராமசேவக வத்தை, பிரண்டியாவத்தை, கொடிகாவத்தை, கொகிலவத்தை, கித்தம்பகுவ என நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் சிங்களவர்களும், முஸ்லிம்களும் மாத்திரம் தான்.

தமிழ் மக்கள் வெரும் 1% சதவீதத்திற்கு உட்பட்டவர்களே அப்பகுதியில் வாழ்கிறார்கள்.

கொழும்பின் கொட்டாஞ்சேனை, வெள்வத்தை உள்ளிட்ட சில பகுதிகளில் தான் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள், விகடன் கட்டுரையாளரின் வார்த்தையில் குறிப்பிடுவதானால் “அடர்த்தியாக” வாழ்கிறார்கள்.

எங்கோ வாழும் ஒரு சமுதாயத்தை இன்னொரு இடத்தில் வாழ்வதாக காட்டியது மாத்திரமன்றி அவர்கள் தான் முழு உதவியும் செய்தார்கள் “மானுடமே வென்றது” என்று தலைப்பிடுவது மொட்டை தலைக்கும், முட்டுக் காலுக்கும் முடிச்சுப் போடுவதற்கு சமமானதாகும்.

சென்னையில் இடம் பெற்ற வெள்ளப் பெருக்கின் போது பாதிக்கபட்ட மக்களை உயிரைப் பணயம் வைத்து முஸ்லிம்கள் காப்பாற்றினார்கள். அதனை அங்கிருந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்த காரணத்தினால் சென்னை வெள்ளத்தில் தம் பக்கம் மார்க் போட்டுக் கொள்ள முடியாமல் போனதினால் இலங்கை வெள்ளத்தில் தமிழர்கள் என்ற பெயரிட்டு மானுடமே வென்றது தமிழர்கள் எப்படித் தெரியுமா? என்று சுவரில்லாமல் சித்திரம் வரைய எத்தனித்துள்ளது விகடன்.

(து)வேச ஊடகமாக மாறிய ஆனந்த விகடன்

சென்னையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்திலும் சரி. இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளமானாலும் சரி உயிரை துச்சமென நினைத்து மக்களை காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள் என்பது வெள்ளிடை மழை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மேற்கொண்ட மீட்புப் பணி, நிவாரணப் பணி, துப்பரவுப் பணி என்பவற்றை பாராட்டாத மாற்று மத நண்பர்களே இல்லையென்கிற அளவுக்கு பணி செய்தார்கள் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள். சுமார் 32 கோடி இந்திய ரூபாய்களுக்கான நிவாரணப் பணியை மேற்கொண்டது தவ்ஹீத் ஜமாஅத்.

இதே நேரத்தில் தற்போது இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கின் போதும் களம் கண்டது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கை கிளையாக செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர் படை இரவு பகல் பாராது அனைத்து சமுதாய மக்களையும் மீட்டெடுத்தது.

Untitled

இராணுவத்தின் மீட்புக் குழு கூட வருகை தராத நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட படகுகளை இறக்கி மீட்புப் பணியை முன்னெடுத்தது மாத்திரமன்றி, இரவு பகலாக பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்குமான உணவு, உடை, உலர் உணவுப் பொருட்கள், வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் என (இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை) உதவிக் கொண்டிருக்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆயிரக் கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றினார்கள் முஸ்லிம்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

வீடுகளை துப்பரவு செய்கிறார்கள். தெருக்களில் துப்பரவுப் பணி செய்கிறார்கள். குப்பைகளை அள்ளுகிறார்கள். தேடிச் சென்று உதவுகிறார்கள். நிலைமை இவ்வாறிருக்க இஸ்லாமியர்களை சிங்களவர்களும், தமிழர்களும் தான் காப்பாற்றினார்கள் என்று கதையளப்பது. கபடத்தனம், வடிகட்டிய குரோதம் என்பதைத் தவிர வேறில்லை.

மனம் உருகிய சிங்கள மக்கள்.

முஸ்லிம்களும், சிங்கவர்களும் அடத்தியாக வாழும் பகுதியிலேயே குறித்த வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் சிங்கள மக்களையும் சேர்த்து முஸ்லிம்களே காப்பாற்றினார்கள். இதற்கான வீடியொ, புகைப்பட ஆதாரங்கள் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன.

தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களின் மீட்புப் பணியை பாராட்டிய சிங்கள பெரும்பான்மை சகோதரர்கள் நீங்கள் தேர்தலில் வாக்குக் கேட்டால் உங்களைத் தவிர வேறு யாருக்கும் நாம் வாக்களிக்க மாட்டோம். உங்களைப் போன்ற மக்களுக்காக வாழும் மனிதர்கள் தான் சமுதாயத்திற்கு தேவை என்றார்கள்.

ராகுல வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள பெரும்பான்மை சமுதாய மக்களுக்கு உதவிய தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களிடம் பேசிய சிங்கள மக்கள். முஸ்லிம்கள் செய்த உதவியைப் போல் யாரும் எங்களுக்கு எவ்வித உதவியையும் செய்ய வில்லை என்றார்கள்.

முஸ்லிம்களினால் காப்பாற்றப் பட்ட சிங்கள மக்கள் மனம் உருகிய வீடியோக்களை பாருங்கள். முஸ்லிம்களின் தியாகம் வெளிப்படும்.

வாயார பாராட்டி வரும் புத்த பிட்சுகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து, உணவு, உடை, தங்க இடம், பாடசாலை உபகரணங்கள், வீட்டுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் போன்றவற்றை கொடுத்து, வீட்டையும் தெருவையும் துப்பரவு செய்து கொடுத்த முஸ்லிம் சமுதாயத்தை வாயார பாராட்டுகிறது பெரும்பான்மை சிங்கள சமுதாயம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கொலன்னாவ, சிட்டினாமலுவே, வஜிர தேரர் அவர்கள் குறிப்பிட்ட செய்தியைப் பாருங்கள்.

Untitled

கொலன்னாவ, சிட்டினாமலுவே, வஜிர தேரர்

தொப்பி அணிந்த முஸ்லிம்களைக் காண்டால் முன்பெல்லாம் எமது மக்களுக்கு பயம் ஏற்பட்டது. அவர்கள் எமது காணிகளை அபகரித்துக் கொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் முஸ்லிம்களோ மனித நேயம் மிக்கவர்கள். வெள்ளத்தின் போது எங்கள் பன்சலைகளில் தங்கியிருந்த மக்களுக்கு தேவையான 90 சதவீதமான உதவிகள் பள்ளிகள் மூலமாகவே கிடைத்தது. பள்ளிகள் மேலும் உருவாக வேண்டும். புதிய பள்ளிகளை உருவாக்கும் போது முதல் சீமந்து பாக்கட்டை நானே வழங்குவேன். என்றார்  இலங்கை புத்த பிட்சு கொலன்னாவ, சிட்டினாமலுவே, வஜிர தேரர் அவர்கள்.

அதே போல் இலங்கையின் திகாரிய பகுதியை சேர்ந்த இன்னொரு புத்த இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

நாமும் எமது பகுதியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கேள்விப் பட்டுத் தான் முஸ்லிம்கள் நமக்கு உதவ இங்கு வந்திருக்கிறார்கள். நாம் நிர்கதியாக இருக்கும் இந்நேரத்தில் இப்படியான உதவிகள் நமக்கு கிடைப்பது என்பது பெரிய விஷயமாகும். Untitled2இது மிகவும் நன்மையான காரியமாகும்.

நாம் இலங்கையர்கள், நாம் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்ற உணர்வு முஸ்லிம்களிடம் இருக்கிற காரணத்தினால் தான் அவர்கள் நம்மைத் தேடி வந்து உதவி செய்கிறார்கள். முஸ்லிம்கள் மனதில் கோபம், பொறாமை போன்ற எண்ணங்கள் இருந்திருந்தால் இப்படி நம்மை தேடி வந்து உதவியிருக்க மாட்டார்கள்.

நமது மக்கள், நமது சகோதரர்கள், நமது உறவினர்கள் என்ற உணர்வினால் தான் அவர்கள் நம்மை தேடி வந்து உதவுகிறார்கள் இது உண்மையில் மிகப் பெரிய விஷயமாகும்.

முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகள், வியாபாரங்கள், மற்றும் வாழ்கையின் எல்லா காரியங்களும் நல்ல படியாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார்.

இப்படி அனைத்து மதத்தினரும் பாராட்டும் வகையில் மீட்புப் பணி, நிவாரணப் பணி, துப்பரவுப் பணி என்று தொடரும் முஸ்லிம்களின் உதவிகளை எல்லாம் உதாசீனப்படுத்தும் விதமாக கட்டுரை எழுதியது மாத்திரமன்றி செய்யா உதவிக்கு புகழ் விரும்பும் கயமைத் தனத்தை என்னவென்பது?

வந்து பார்த்தோம், கள ஆய்வு செய்தோம், நேரில் சந்தித்தோம், இணையத்தில் மேயவில்லை, மொழியாக் கட்டுரையில்லை என்றெல்லாம் நீங்கள் என்ன பெயரிட்டாலும் நீங்கள் தார் பாயில் வடிகட்டிய பொய்யர் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

இறுதியாக…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை வழங்க முயற்ச்சி செய்யுங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியர்களை அவமதிக்கும் குணத்தை விட்டு விடுங்கள். செய்யாக காரியத்திற்கு கூலியையோ, புகழையோ எதிர் பார்க்காதீர்கள். என்பதே ஆனந்த விகடன் மட்டுமல்ல ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நாம் சொல்லிக் கொள்ள விரும்பும் செய்தியாகும்.

இந்த வெள்ளப் பெருக்கு குப்பைகளை மாத்திரமல்ல இனவாதத்தையும் இலங்கையில் இருந்து துடைத்து செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

குறிப்பு:

ஆனந்த விகடனின் குறித்த ஆக்கத்திற்குறிய மறுப்பு கடந்த 10.06.2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ வார இதழான உணர்வில் வெளியிடப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ள நிவாரணப் பணி பற்றி அறிய கீழுள்ள இணைப்புகளை பார்வையிடுங்கள்

மீட்புப் பணி

மருத்துவ சேவை

உணவு, உலர் உணவு விநியோகம்

துப்பரவுப் பணி

தவ்ஹீத் ஜமாஅத்தின் பணியை பாராட்டிய பாதிக்கப்பட்ட மக்கள்

3,548 total views, 1 views today