LATEST
Home » கட்டுரைகள் » அழைப்பு - ஆசிரியர் தலைப்பு » கருகும் மொட்டுக்களை காப்பதற்கு என்ன வழி?

கருகும் மொட்டுக்களை காப்பதற்கு என்ன வழி?

இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான தேசமாக மாறியதோ இல்லையோ அண்மைக்காலமாக ஆபாசத்தினதும், அனாச்சாரத்தினதும் அடிமை தேசமாக மாறிவருவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சமாகும். 2015 ஆம் ஆண்டில் உலகளவில் ஆபாச இணையதளங்களை அதிகம் பார்வையிட்ட நாடுகள் வாpசையில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளமை இந்நாட்டின் ஒழுக்க விழுமியம் சிதைந்து வருவதனையே பிரதிபலிக்கின்றது. இலங்கையில் உத்தியோகப் பூர்வ அறிக்கையின் படி 47000 விபச்சாரிகள் உள்ளதோடு, இவர்களை நாடி நாளாந்தம் 94000 ஆண்கள் விபச்சாரத்திற்காய் சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக விபச்சாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தமக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கி, விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என ஊடகங்களில் பேட்டி வழங்கும் அளவுக்கு அனாச்சாரம் பெருகியுள்ளமை கவலைக்கிடமானதே. புற்றீசல்களாய் சந்தி பொந்துகளில் எல்லாம் விபச்சார விடுதிகள் பெருகியுள்ளன. ஒருபால் திருமணத்தை ஊக்கப்படுத்தும் சங்கம் உத்தியோகப்பூர்வமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகக் கட்டமைப்பில் அவர்கள் செயற்பட்டும் வருகின்றனர். ஆபாசம் கொப்பளிக்கும் களியாட்ட நிகழ்வுகள் அதிகரித்துள்ளதுடன், அண்மையில் இலங்கை வருகை தந்த லத்தீன் அமெரிக்க பாடகரின் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட யுவதி, தனது மார்புக் கச்சையை அவிழ்த்து பாடகரின் மேல் வீசும் அளவுக்கு இளைய சமுதாயத்தின் சிந்தனைச் செல்நெறிகள் சீர்கெட்டுள்ளன என்பதையும் அவதானிக்க முடிகிறது. எங்கும் எதிலும் விரசமும், காமமும், களியாட்டமும் அதிகரித்து, நாட்டு குடிமக்களின் எண்ண ஓட்டங்கள் முழுவதுமாய் மாசுற்றுள்ள நிலையினை கூர்ந்து நோக்கின் காணலாம்.

இதன் தவிர்க்க முடியாத எதிர்விளைவுகளில் சில வெளிப்பாடுகள் தான் அங்கிங்கெனாதபடி பெருகும் பாலியல் வன்கொடுமைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் ஆகும். இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறாள். 8 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை ஒரு சிறுமியோ சிறுவனோ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றனார். உத்தியோகப் பூர்வமாக இலங்கையில் 40000 சிறுவார் சிறுமியார்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனார். சிறுவர் துஷ்பிரயோகம் இடம் பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 4வது இடம் கிடைத்துள்ளதெனில் நிலைமை எந்தளவுக்கு எல்லை மீறிசென்றுள்ளது என்பதனை யூகிக்க முடியுமாயுள்ளது.

பலாத்காரத்தின் பிற்பாடு கொல்லப்பட்ட காத்தான்குடியைச் சோர்ந்த 8 வயது சீமா, 5 வயதுச் சிறுமி சேயா, உயார்தர மாணவி வித்யா முதல் வவுனியாவில் அண்மையில் துஷ்பிரயோகம் புரிந்து கொல்லப்பட்ட ஹரிஸ்னவி வரை இப்பட்டியல் முற்றுப்புள்ளியின்றி நீண்டு செல்வதை காணலாம். 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளார் ருவன் குணசேகர அவர்களின் அறிக்கையின் பிரகாரம், கடந்த ஆண்டு நாட்டில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 1854. இதில் 1501 சம்பவங்கள் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் மீதானவை. அதிலும் 1209 சம்பவங்கள் அச்சிறுமிகளின் விருப்பத்துடன் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியான விடயம். இந்நாட்டின் எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் அதளபாதாளத்தை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளது என்பதற்கு இப்புள்ளி விபரம் ஒன்றே போதுமானது.

அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களின் பின்புலத்தில் மறைந்திருக்கும் காமுகப் புள்ளிகளின் விபரங்களை பார்க்கும் போது உச்சந் தலையில் இடிவிழுந்த உணார்வு பிறப்பது திண்ணம். யாரெல்லாம் சிறுவார்களின் பாதுகாப்புக்கு அரணாக அமைவார்கள் என்று கருதி பிள்ளைகளை எவர்களின் பாதுகாப்பில் தனிமையில் விட்டுச் செல்கின்றோமோ, அந்நெருக்கமானவார்களின் வட்டத்தில் தான் வெள்ளாட்டை வேட்டையாடும் ஓணாய் ஒழிந்திருப்பது ஆச்சரியமானதே. சொந்தத் தந்தை, வளார்ப்புத் தந்தை, சித்தப்பா, மாமா, உடன் பிறந்த சகோதரன், பெரியப்பா, பாட்டன், மச்சான், குடும்ப நண்பன், அயல்வீட்டான், உறவுக்காரார்கள், ஆசிரியர்கள், வைத்தியார்கள், உயார் அதிகாரிகள், மதகுருமார்கள், நம்பி அனுப்பும் வாகன சாரதிகள் என்று காமுகக் கூட்டத்தின் பட்டியல் விரிந்து கிடப்பதை என்வென்று சொல்வது? எந்தப்புற்றில் விஷம் கக்கும் காமுகப்பாம்பு குடிகொண்டுள்ளது என்பதை கண்டறிவது என்பது சிரமசாத்தியமானதாக மாறியுள்ளமை பெரும் அவலமே.

பட்டி தொட்டியெங்கும் பெருகி வரும் சிறுவர் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு விதமான காரணிகளை எம்மால் அடையாளப்படுத்த முடியும். அவற்றில் அதிபிரதானமானவையாக கீழ்காணும் அம்சங்களை குறிப்பிடலாம்.

01.நாட்டில் அதிகரித்துள்ள கஞ்சா, சாராயம், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை.

புகைத்தல் மூலம் 55 பில்லியன் வருமானமும், சாராயம் மூலம் 60 பில்லியன் வருமானமும் நாட்டுக்குக் கிடைக்கும் நிலையில் அரசு இப்போதைப் பொருளுக்கு எதிராக களமிரங்குவது என்பது முடவன் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவே அமையும். அதிகரித்த போதைப்பாவனையால் பாதிக்கப்பட்டவார்களினாலேயே பெருவாரியான துஷ்பிரயோகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்பதுவே யதார்த்தம்.

02.பெற்றோர்களின் வெளிநாட்டுப் பயணங்கள்.

பிள்ளைகளை உறவினார்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டுப் பயணங்களை பெற்றோர் மேற்கொள்வதனால் பிள்ளைகள் தனித்து விடப்படுகிறார்கள். இத்தனிமை துஷ்பிரயோகங்கள் நிகழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

03.கணவன் மனைவி இருவரும் உழைக்கச் செல்கின்றமை.

உள்நாட்டுக்குள்ளேயே ஆனாலும் இருவரும் உழைக்க வெளிக்கிழம்பி விடுவதனால் ஏற்படும் தனிமைகள் தப்பு நடப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.

04.அதிகரிக்கும் குடும்பச் சண்டைகளும், விவாகரத்துகளும்.

கணவன் – மனைவி இருவரது இல்வாழ்வு இன்பத்தை இழந்து விரிசல் அடைந்து விவாகரத்தில் சென்று முடியும் போது, பிள்ளைகள் நட்டாற்றில் விடப்படுகின்றனார். இவ்வனாதரவான நிலை விபரீதம் நடக்க வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

05.அலங்கோலமான அரைகுறை ஆடை கலாச்சாரம்.

சிறு பிள்ளைகளேயானாலும் பெற்றோரின் அசமந்தப் போக்கினால் அங்கங்களின் திரட்சி வெளிப்படும் படியாக இறுக்கமாக அணிவிக்கப்படும் அரைகுறை ஆடைகள் கூட காமுகர்களின் சபலப் பார்வைக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

06.தனிமையான பயணங்கள்.

பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச் செல்லாது, அவசரத்திற்காக தெரிந்தவார்களின் ஆட்டோக்களிலும், பொது பஸ்களிலும் அனுப்பி விடுகின்றார்கள். அத்துடன் மாலை நேர – அதி காலை நேர டியுஷன் வகுப்புகளுக்கென்றும் பிள்ளைகளை தகுந்த கண்காணிப்பு இன்றி பெற்றோர் அனுப்பிவிடுகின்றனார். உங்கள் பிள்ளை தனித்துவிடப்படும் இதுபோன்ற சந்தார்ப்பங்கள் தப்பு நடப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

07.தெரிந்தவார்கள், நண்பர்கள் போன்றோருடன் பிள்ளைகளுக்கு ஏற்படும் எல்லை கடந்த நெருக்கமும் இத்தவறுகளுக்கு ஏதுவான காரணமாகும்.

நாட்டில் அதிகரித்து வரும் சாபக் கேடான சிறுவார் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசு அவசியம் சில அம்சங்களை நடைமுறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

1) நாட்டின் வருமானத்தை கருத்தில் கொள்ளாது குடிமக்களின் நலனை சிந்தையில் கொண்டு போதைப் பொருள் பாவனையை முற்றாக தடை செய்து சட்டம் இயற்றுதல் வேண்டும்.

2) குடும்பப் பெண்கள் காசுக்காக வெளிநாட்டு உழைப்புக்குச் செல்வதனை முற்றாக தடுத்தல் வேண்டும்.

3) ஆடை விடயத்தில் அனைத்து மதத்தவரும் பேனும் விதத்தில் மார்பு, தொடை, இடை, தொப்புல் என்று அங்கப்பரிமானங்களை வெளிக்காட்டும் படியான ஆடைகளை கட்டுப்படுத்தும்படியான ஆடை விதிமுறைகள் சட்டமாக்கப்படல் வேண்டும்.

4) ஆபாச இணையதளங்களை அரசு உடனடியாக முடக்குவதுடன் ஆபாச திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் இருவட்டு விற்பனைகளுக்கும் தடைவிதித்தல் வேண்டும்.

5) தொடர்ந்தும் குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணிகளில் ஒன்று குற்றவாளியை அச்சமடையச் செய்யும் படியான தண்டனை முறை அமுலில் இல்லாமையே. எனவே, சிறுவார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு உச்ச கட்ட தண்டணையாக மரண தண்டனையினை அமுலுக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

இது போன்ற நடைமுறைகளை அரசு கைக்கொள்ளுமேயானால் காமுகார்களின் வக்கிரக பார்வையிலிருந்து எமது இளம் சந்ததியினரை பாதுகாக்க முடியும். வீட்டிலும் நாட்டிலும் ஒழுக்கவிழுமியமுள்ள நட்பிரஜைகளை உருவாக்க முடியும்.

சிந்திக்குமா அரசு?

ஆக்கம் : M.T.M பர்சான் (ஆசிரியர் அழைப்பு மாத இதழ்)

நன்றி: அழைப்பு மாத இதழ் – ஆசிரியர் தலையங்கம் – ஏப்ரல் – 2016

604 total views, 1 views today