LATEST
Home » எழுத்தாளர்கள் » சகோ. ஷப்னா கலீல் » மறுமையில் சுவன வாழ்வை இழக்கும் முட்டாள்கள் – ஏப்ரல் பூல் பற்றிய சிறப்புக் கட்டுரை

மறுமையில் சுவன வாழ்வை இழக்கும் முட்டாள்கள் – ஏப்ரல் பூல் பற்றிய சிறப்புக் கட்டுரை

நாளை ஏப்ரல் 01ம் தேதி ஆகும். ஏப்ரல் 01ம் தேதி என்றாலே பிறரை ஏமாற்றி முட்டாளாக்கும் நாள் என்று கருதி பல பேர் பலவிதமான பொய்களை கற்பனை செய்து கொண்டிருப்பார்கள் விடியும் வரை.

ஏப்ரல் முதலாம் தேதி என்பது உலக முட்டாள்கள் தினம் என்று பலராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தில் பிறரை ஏமாற்றுவதும், அதற்காக பொய் சொல்வதும் பொய்யை உண்மையென்று நம்பவைக்கும் விதமாக பொய்ச் சத்தியங்களும், பொய் சாட்சிகளையும் உருவாக்குவதும் வேடிக்கையான விஷயமாக இன்று காட்சிப்படுத்தப் படுகின்றது. இதுவொரு தவறான காரியம் என்று சுட்டிக் காட்டப்பட்டால் இதுவொரு பொழுது போக்கான விஷயம் என்று அதற்கு நியாயம் (?) கற்பிப்போரையும் நாம் காண முடியும்.

ஏப்ரல் 01ம் தேதி சர்வதேச முட்டாள்கள் தினம் (உத்தியோகப்பூர்வமற்ற) முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினம் அனுஷ்டிக்க ஆரம்பமான வரலாறு தொடர்பில் விக்கிபீடியா கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய செய்தியைப் பாருங்கள்.

முட்டாள்கள் தினம் உருவானதெப்படி?

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 01 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 01 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

உலக முட்டாள்கள் தினம் ஆரம்பமான வரலாற்றை இவ்வாறு விக்கிபீடியா விபரிக்கிறது.

இந்த முட்டாள்கள் தினத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல்

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் நாட்களை நல்ல நாள், கெட்ட நாள் என்று பிரிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. ஒரு நாளை முட்டாள்களின் நாளாகவும், ஒரு நாளை புத்திசாலிகளின் நாளாகவும் பிரிப்பது என்பது இஸ்லாம் அனுமதிக்கும் காரியம் அல்ல. ஒருவன் முட்டாளாக இருக்கும் அதே நேரம் இன்னொருவன் புத்திசாலியாக இருப்பது என்பது உலக வழமையாக இருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு குறிப்பிட்ட நாளை முட்டாள்களின் நாள் என்று பிரிப்பது இஸ்லாம் கண்டிக்கும் செயல்பாடாகும்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“  வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

புகாரி – 4826

ஒருவரை பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதியளிக்க வில்லை. பொய்களையும், மூடக் கலாசாரத்தையும் இஸ்லாதொழிப்பதற்கே இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகுக்கு தரப்பட்டது.

நரகத்திற்கு வழி ஏற்படுத்தும் பொய்.

ஒருவர் பொய் சொல்வது என்பது அவரை நரகத்திற்கு அழைத்து சென்று விடும். இறுதியில் அவர் இறைவனிடம் பெரும் பொய்யர் என்ற நிலையை அடைந்து விடுவார். என நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக் – எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

புகாரி : 6094

பொய் பேசுவதும், பொய் சாட்சி சொல்லுவதும் பெரும் பாவம்.

பொய் சொல்வதை சாதாரண அற்பமான விஷயமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எதனை அற்பமானதாக எண்ணுகிறோமோ அந்தப் பொய்கள் தான் நாளை மறுமையில் நம்மை நரகத்தில் நுழைவிக்கச் செய்து விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு எதிராக பொய்யான சாட்சியை சொல்வதின் மூலமாக இவ்வுலகில் நாம் வெற்றி பெற்று விட்டாலும் கண்டிப்பாக மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகி விடுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொய் சாட்சி சொல்வதின் விபரீதத்தை நபியவர்கள் இவ்வாறு நமக்கு விபரிக்கிறார்கள்.

அபூபக்ரா நுஃபைஉ  பின்  ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்” என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)” என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் “அவர்கள் நிறுத்திக் கொள்ளக் கூடாதா?” என்றேன்.

புகாரி – 5976 

பொய்யர்கள் ஷைத்தானின் தோழர்கள்

பொய் சொல்வது ஏதோவொரு பொழுதுபோக்கான காரியம் என்று நம்பில் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் பொய்யர்கள் ஷைத்தானின் செயல்பாட்டை சுமந்தவர்கள் என்று நபியவர்கள் சொல்லித் தருகின்றார்கள்.

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாது காக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்  என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, “உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்’ என்று சொன்னேன்’ என்று கூறிவிட்டு, – அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள்.- (இறுதியில், திருட வந்த) அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது “ஆயத்துல் குர்ஸீ’யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்” என்று கூறினான். (இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், “அவன் பெரும் பொய்யனாயிருப்பினும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்” என்று கூறியதாகவும் சொன்னார்கள்.

புகாரி – 5010

மேற்கண்ட செய்தியில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஆயதுல் குர்சியை கற்றுக் கொடுத்தவன் தொடர்பில் நபியவர்கள் சொல்லும் போது அவர் சொன்னது உண்மையென்றாலும் அவன் பெரும் பொய்யன், அவன் தான் ஷைத்தான் என்று விபரிக்கிறார்கள்.

ஷைத்தான் பொய்தான் சொல்வான். ஆனால் இன்று சொன்னது உண்மை என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

ஷைத்தானின் குணமாக இருக்கிற பொய் சொல்லும் காரியத்தை நாம் செய்வது நம்மை நரகத்தில் ஷைத்தானுடன் கூட்டாக்கிவிடும் காரியமாகும்.

ஒரு முஸ்லிம் ஏமாற்றுபவனாக இருக்க மாட்டான்.

ஏப்ரல் முதலாம் நாள் பிறரை ஏமாற்றுவதற்காகவே பொய்யான செயல்பாடுகளில் பலரும் ஈடுபடுகின்றார்கள். இதில் முஸ்லிம்கள் என்று தம்மை சொல்லிக் கொள்ளக் கூடியவர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் பார்க்க முடியும்.

பொய் சொல்லி, ஒருவனை நம்ப வைத்து ஏமாற்றுவது ஒரு முஸ்லிமின் இறையச்சத்திற்கு பொருந்தாத செயல்பாடாகும். தனது நாவினால் அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காதவனே உண்மை முஸ்லிமாவான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தின் வழியில் வாழும் உண்மை முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவர் தனது நாவினாலோ, கரத்தினாலோ அடுத்தவர்களுக்கு எவ்வித தொல்லைகளையும் கொடுக்கக் கூடாது.

ஏப்ரல் மாதம் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று கூறி சக மனிதர்களை பொய் சொல்லி கஷ்டப்படுத்துவது உண்மை முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.

புகாரி – 10

சக மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடியவர்கள் உண்மை முஸ்லிம்கள் அல்ல என்று நபியவர்கள் மேற்கண்ட செய்தியின் மூலம் தெளிவாக நமக்கு எச்சரிக்கின்றார்கள்.

உண்மையான முட்டாள்கள் யார்?

பிறரை முட்டாளாக்க வேண்டும், ஏமாற்ற வேண்டும் அதன் மூலம் ஓர் அற்ப சந்தோஷத்தை அடைய வேண்டும் என்பதற்காக பொய் சொல்லித் திரிபவர்களே உண்மையான முட்டாள்கள் ஆகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.

முஸ்லிம் – 5037

இந்த உலகில் கிடைக்கும் அற்ப இன்பத்திற்காக நிரந்தரமான மறுமை வாழ்வை எந்தவொரு முஸ்லிமும், புத்திசாலியும் இழக்க விரும்ப மாட்டான். ஆனால் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் நாள் என்று கூறி யாரெல்லாம் பொய் சொல்லித் திரிகின்றார்களோ அவர்களே உண்மையான முட்டாள்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற சமுதாய கொடுமைகளை விட்டும் விலகி உண்மை இஸ்லாத்தின் வழி நடந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!

-ஆக்கம் : ஷப்னா கலீல் – மாளிகாவத்தை

இதுவரை படிக்காவிட்டால் படித்து விடுங்கள்…

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்குர்ஆன் சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்புக்கும் மற்ற அமைப்புகளின் மொழிபெயர்ப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?

12620859_1285180221499106_277722653_oஇஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச்சாட்டான ஜிஹாத் தொடர்பில் பல தலைப்புக்களில் தேவைப்படும் இடங்களில் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பதை குறித்த விளக்கங்களைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் 

 

2,147 total views, 1 views today