LATEST
Home » அறிவியல் » உலகம் அழிவது நிச்சயம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்

உலகம் அழிவது நிச்சயம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்

உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகள் தினந்தோறும் நவீன அறிவியலாளர்களினால் உண்மைப் படுத்தப்பட்டு வருகின்ற காட்சிகளை கண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளின் ஒன்றான உலக அழிவு தொடர்பில் நவீன விஞ்ஞானம் பல புதிய தகவல்களை தந்த வண்ணமே உள்ளது.

அண்மையில் லண்டன் BBC செய்திச் சேவை நடத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் உலக அழிவு என்பது நிச்சயமான ஒன்று தான் என்பதை மிகத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

“குறிப்பிட்ட ஒரு ஆண்டில் உலகம் ஒரு பேரழிவில் சிக்கி அழிந்துவிடும் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவானதுதான் என்றாலும், காலம் செல்லச் செல்ல, ஆண்டுகள் கூடக்கூட அதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி நடப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகிவிடும்”, என்றார் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.

2016 ம் ஆண்டுக்கான பிபிசியின் ரீத் உரை நிகழ்த்தும் போது அண்டவெளியின் black holes பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (BBC செய்தி 19.01.2016)

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் தெரிவித்த இந்த செய்தியை புனித மிக்க இஸ்லாமிய மார்க்கம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்து விட்டது.

யுகமுடிவு நேரம் வந்தே தீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். (அல்குர்ஆன் 20:15)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்? (அல்குர்ஆன் 07:185)

சூரியன் சுருட்டப்படும்போது, நட்சத்திரங்கள் உதிரும்போது, மலைகள் பெயர்க்கப்படும்போது, கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது, கடல்கள் தீ மூட்டப்படும்போது (அல்குர்ஆன் 81:1,2,3,4,6)

பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும்போது (அல்குர்ஆன் 99:01)

உலக அழிவின் காலம் யாராலும் முடிவெடுக்க முடியாதது.

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் உலக அழிவின் சாத்தியம் தொடர்பில் பேசும் போது “அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி நடப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகிவிடும்” என்று கூறுகிறார்.

உலகம் அழியும் என்பது நிச்சயமான ஒன்றாகும் இறைவன் நாடினால் எப்பொழுதும் அது சாத்தியப் படலாம். ஆனால் அது எந்நேரத்தில் அழியும் என்பதை இறைவனைத் தவிர யாராலும் கூற முடியாது. இறைவனின் தூதர் முஹம்மது நபியாலும் முடியாது என்று குர்ஆன் கூறுகிறது.

‘அந்த நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.’இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். ‘இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(திருக்குர்ஆன் 7:187)

உலக அழிவிலிருந்து மனிதன் தப்பிக்க முடியுமா?

உலகம் அழியும் போது அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இவ்வாறு பதில் சொல்கிறார்.

“அப்படி நடப்பதற்கு முன்னர் மனிதர்கள் அண்டவெளியின் மற்ற இடங்களுக்கு, கோள்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு பரவி வாழப்பழகியிருக்க வேண்டும். அப்படி நடந்தால் நாம் தற்போது வாழும் இந்த உலகத்துக்கு அழிவு ஏற்பட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்கிற நிலைமை உருவாகாது”, என்றார்.

இவ்வுலக வாழ்வு என்பது ஒரு சோதனைக் களமாகும். மனிதன் இவ்வுலக அழிவின் பின்னர் ஈடேற்றமான வாழ்வைப் பெற இவ்வுலகில் சிறப்பானவனான இஸ்லாம் காட்டிய வழியில் வாழ்வதே புத்திசாலித் தனமானதாகும். அதை விடுத்து உலகம் அழியும் காலத்தில் வேறு கோள்களுக்கு சென்று தப்பித்துக் கொள்ள முடியும் என்று நினைப்பது அறிவுடைமையானது அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை படைத்த இறைவன் இது தொடர்பில் என்ன சொல்கிறான் என்பதை பாருங்கள்.

அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க இயலாத நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள்! அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இல்லை. உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை.

(அல்குர்ஆன் 42:47)

மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் உலகம் அழிவது நிச்சயம் நடைபெரும் ஒன்று தான் என்பதையும், உலக அழிவு நடைபெறும் போது யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பதையும் இறைவன் திட்டவட்டமாக தெரிவிக்கிறான். நாம் வாழும் இன்றைய நவீன உலக ஆய்வுகளும் இதனை இன்று நிரூபிக்கக் கூடிய காட்சிகளை நாம் காணக் கிடைப்பது இஸ்லாம் உண்மையான மார்க்கம் தான் என்பதற்கு மேலதிக வலு சேர்க்கிறது.

ஆக்கம்: ஷப்னா கலீல்

நன்றி: அழைப்பு மாத இதழ் (பெப்ரவரி 2016)

1,851 total views, 2 views today