LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை » வெளிநாட்டு வாழ்வும், ஏகத்துவ எழுச்சியும்

வெளிநாட்டு வாழ்வும், ஏகத்துவ எழுச்சியும்

வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தாயகத்தில் உள்ள உறவுகளின் நல்வாழ்வுக்காகவும் தமது தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் உலக வாழ்வுக்காக பணத்தைத் தேடும் அதே நேரம் மறுமை வாழ்வுக்காக ஏகத்துவப் பணியாற்றும் விதம் இறைவன் அவர்களுக்கு செய்த மாபெரும் அருளாகும்.

பாலை வன மண்ணில் இறைவனின் மார்க்கத்திற்காக இவர்கள் செய்யும் தியாகங்கள், படும் கஷ்டங்கள் போன்றவற்றை விபரிக்கும் விதமாகவே இந்த ஆக்கம் அமையப் பெற்றிருக்கின்றது.

பாலை வனத்தில் ஓர் பாவ மீட்சிப் பயணம்.

பாலை வனப் பெரு நிலம், மொழியால் அரபு பேசும் மக்கள் வாழும் பகுதி, இஸ்லாம் மாத்திரம் வந்திரா விட்டால் நாகரீகமும், மனிதப் பண்புகளும் காலடி மண்ணோடு மக்கிப் போயிருக்குமோ என்று எண்ணுமளவுக்கான மனிதர்கள், நரக நெருப்பையும் உலகில் நினைவூட்டும் விதமான அனல் காற்று என்று அரபு மண்ணின் கஷ்டங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 03:104

நாங்கள் இவ்வுலகில் மாத்திரமல்ல, மறு உலகிலும் வெற்றி பெற்றவர்களாக மாற வேண்டும் என்ற தூய சிந்தனையில் இவ்வுலக வாழ்வுக்காக வெளிநாடு சென்றவர்கள் மறு உலக வாழ்வுக்காகவும் உழைக்கும் உழைப்பு அளப்பரியது.

வெளிநாட்டு வாழ்க்கையைப் பொருத்த வரையில் நன்மை செய்ய வேண்டும் என்பதை விட தீமை செய்து விடாமல் இருப்பதே மேல் என்று நினைக்கும் அளவு தீமைக்கு மிக நெருங்கமாக ஒரு மனிதன் வாழும் இடம் எனலாம்.

தான் யாரென்று தெரிந்த ஒரு சிலர் மாத்திரமே அங்கிருப்பார்கள். தெரிந்தவர்கள் இருக்கும் போதே பாவம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் தன்னை அறிந்தவர்கள் இல்லாத போது தவறு செய்யாமல் இருப்பதென்றால், அது இறையச்சம் உடையவர்களுக்கு மாத்திரம் தான் முடியும்.

பாலை வன மண்ணில் வாழும் நமது ஏகத்துவ சொந்தங்கள் என்றும் கொள்கை வாதிகளாகவும், ஒழுக்க விழுமியங்களை பேணுபவர்களாகவும் இருப்பதற்கு காரணம் இறையவனின் பயமும், மற்றவர்களுக்கு தெரிந்தால் அசிங்கமாக, அவமானமாக பார்க்கப் படுவோமே என்ற குற்ற உணர்வும் தான். இது தான் இறைவனின் அவர்களுக்கு வழங்கிய சிறந்த பாதுகாப்பு அரணாகும்.

நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை (“அல்பிர்ரு’) மற்றும் தீமை (“அல்இஸ்மு’) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.

முஸ்லிம் : 4992

நாம் வாழுவது வெளிநாடாக இருந்தாலும் அங்கும் நமது கொள்கை உறவை வலுப்படுத்திக் கொள்வதினூடாக இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதைப் போலவே, ஒழுக்கத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் வழியை இறைவன் நமக்கு உண்டாக்கித் தருகின்றான்.

மறுமை வெற்றிக்கான மாற்றுமத பிரச்சாரம்

இறைவனின் இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்களையும், இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் செய்திகளையும் முஸ்லிம்களிடம் சேர்ப்பிக்கும் அதே நேரம் வேலை வாய்ப்புக்காக தம்மைப் போல் அரபுலகம் வந்துள்ள மாற்று மத நண்பர்களுக்கும் எத்தி வைக்கும் பணியில் அங்குள்ள சகோதரர்களின் பங்களிப்பு அளப்பரியது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

புகாரி : 3461

நபியவர்களையும், திருக்குர்ஆனையும் மாற்று மத நண்பர்களுக்கு எத்தி வைக்கும் விதமான பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சிகளை தாயகத்தில் நடத்துவது போல், அரபுலகத்திலும் நடத்தி வருவது. ஏகத்துவ சொந்தங்களின் மறுமைப் பயணத்தின் முக்கிய அம்சமாகும்.

வீட்டு வேலை செய்யும் சகோதரர்கள் கூட தங்களுக்கு கிடைக்கும் சொற்ப்ப நேரத்தையும் மார்க்கப் பணிக்காக ஒதுக்கி செயல்படுவதுடன், தன் மூலம் ஒருவருக்காவது நேர்வழி கிடைக்க வேண்டும் என்ற மேலெண்ணத்தின் காரணமாகவே ஏகத்துவத்திற்காக தமது நேரங்களை இவர்கள் செலவு செய்கின்றார்கள்.

இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் பாரிய தப்பெண்ணங்களை தன்னகத்தே கொண்டு விமானமேறி வெளிநாடு வரும் மாற்று மத சகோதரர்களில் பல பேர் மீண்டும் நாடு செல்லும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிமாகவோ, அல்லது இஸ்லாத்தின் மீது நன்மதிப்பு பெற்றவராகவோ திரும்பிச் செல்வதற்கு காரணம் அங்குள்ள சகோதரர்கள் செய்யும் மார்க்கப் பிரச்சாரங்கள் தான்.

ஆயிரக் கணக்கான குர்ஆன் மொழியாக்கங்கள் தமது சொந்தப் பணத்தை செலவு செய்து வினியோகம் செய்யும் நண்பர்கள் அங்கு ஏராளம்.

வெரும் 100 தீனார்கள், 150 தீனார்கள், 200 தீனார்களுக்காக வேலை பார்க்கும் நண்பர்கள் கூட தமது சம்பளத்தின் ஒரு பகுதியை இறை பணிக்காக ஒதுக்கி விடுவதுடன், செலவழிப்பதுடன் நின்று விடாது மார்க்க பணிகளிலும் செயல் வீரர்களாக பணியாற்றுவதைப் பார்க்கும் போது கண்கள் குலமாகி விடுகின்றன.

தனக்குக் கிடைத்த சத்தியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆசையில் இவர்கள் செய்யும் களப்பணி எழுத்தில் எழுத முடியாதது, வார்த்தையில் வர்ணிக்க இயலாலது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

புகாரி : 1417

மேற்கண்ட செய்தியின் செயல் வடிவமாகவே அரபுலக வாழ் தமிழ் பேசும் சகோதரர்கள் செயல்படுகின்றார்கள் என்பதே ஒரு பெரும் மன அமைதியாகும். – அல்லாஹ் அவர்களுக்கு மேலும் தனது அருளை அள்ளி வழங்க வேண்டும்.

துண்டுப் பிரசுரத்தில் தூய்மை செய்திகள்.

தாயகத்தில் சொந்தத் தொழில் செய்யும் பலர் இறை பணிக்காக இருபது ரூபாய் பணத்தைக் கூட செலவு செய்ய யோசிக்கும் நிலையில், இறைவனின் தூதுச் செய்தியை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இஸ்லாத்தின் கொள்கை விளக்க துண்டுப் பிரசுரங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகள் மூலம் தாராளமாக விநியோகம் செய்யப்படுகின்றன.

எவ்வகையிலேனும் ஏகத்துவக் கொள்கையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே தூய எண்ணம் துண்டும் பிரசுரம் வரை செயல் வடிவம் பெருகின்றது.

விடுமுறை நாள் என்றாலே நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, வீன் விரயம் செய்து, மதுவுடனும், மாதுவுடனும் காலம் கழிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் கிடைக்கும் நேரத்தில் ஒரு துண்டுப் பிரசுரத்தையோ, அல்லது ஒரு ஒளி நாடாவையோ, ஏகத்துவக் கருத்துக்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையோ மற்ற சக தோழர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் விடுமுறை நாளில் கூட வீதி வீதியாய் இவர்கள் செய்யும் பிரச்சாரம், நாம் எங்கே இருக்கின்றோம்? என்று நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க்க வைக்கின்றது.

ஒரு கையில் சிகரெட்டும், மறு கையில் மது பாட்டிலும் என்று அலைந்து திரிந்த இளைஞர் பட்டாலும் இன்று தவ்ஹீத் பெயரால் தவ்ஹீத் ஜமாத்தின் குடைக்குக் கீழ் களப் பணி செய்து, இஸ்லாத்தை எத்தி வைக்கின்றதே என்பதை பார்க்கும் போது, மீண்டுமொரு ஏகத்துவ எழுச்சி ஒளி வீசத் தொடங்கி விட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

சோம்பல் நீக்கும் சுப்ஹு தஃவா

சாதாரணமாக இறைவன் கடமையாக்கிய ஐவேலை பர்ளுத் தொழுகைகளையே நம்பில் பலர் தொழாமல் பொடு போக்காக இருக்கும் நிலையில் அரபுலகத்தில் வீட்டு வேலையிலும், கம்பனிகளிலும் கூலியாட்களாக வேலை செய்யும் சகோதரர்கள் ஒரு வேலை சுன்னத்துத் தொழுகையைக் கூட பேணுவதற்காக தங்கள் நேரத்தை ஒதுக்குகின்றார்கள். இதுவும் ஒரு வித ரஹ்மத் தான்.

பர்ளுத் தொழுகைகளையே பேணாதவர்களுக்கு சுன்னத்தான தொழுகைகள் ஒரு பொருட்டாகுமா என்ன?

நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரீ 1163, முஸ்லிம் 1191

பஜ்ருத் தொழுகையே தொழாதவர்கள் பஜ்ரின் முன் சுன்னத்தைப் பற்றியோ அதன் மூலம் கிடைக்கும் மறுமை பயனைப் பற்றியோ சிந்திப்பார்களா?

தாயகத்தில் இருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்காக பேச்சாளரை அரபு நாடுகளுக்கு வரவழைத்து பிரச்சாரம் செய்யும் ஏகத்துவ உள்ளங்கள். அழைக்கப் பட்டவரை முடிந்த வரை, முடியுமான நேரங்களில் எல்லாம் கொள்ளைத் தெளிவு பெறவும், மார்க்கத்தின் செய்திகளைக் கற்றுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் கிடைக்கும் நேரங்களில் சிறப்பான நேரமான பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரையாற்ற அழைக்கின்றார்கள். ஒவ்வொரு உரைக்கும் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

வேலைப் பழுவை காரணம் காட்டி, வாரத்தில் ஒரு முறை வரும் ஜும்மா தொழுகைக்கே வராதவர்கள் பலர் தாயகத்தில் இருக்கும் போது, இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்யும் சகோதரர்கள் பலரும் பஜ்ருத் தொழுகைக்கு முன் சுன்னத்துக்கே வந்து விடுவது என்பது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தையும், ஏகத்துவப் பிடிப்பையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

தான் மாத்திரம் இந்தக் கொள்கையை ஏற்றவனாயிராமல், தன்னைப் போன்ற அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திடமான ஆர்வத்தில் தன்னுடன் இன்னொருவரையாவது அழைத்து வர வேண்டும் என்ற கொள்கை ஆர்வம் ஏகத்துவத்தில் இன்னும் ஆழமான நம்பிக்கையை இவர்களுக்கு உண்டாக்குகின்றது என்றால் மிகையல்ல.

அறை, அறையாய் இறை வேதத்திற்கான அறை கூவல்.

பள்ளிகளில் பிரச்சாரம், அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி, துண்டுப் பிரசுரம் மூலம் தூய பணி என்றால் தாங்கள் வசிக்கும் அறைகளில் கூட இறைச் செய்தி உணரப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வாரா வாரம் தமது அறைகளுக்குள்ளும் பிரச்சாரப் பணியை இவர்கள் முடுக்கி விடுகின்றார்கள்.

சிறப்பு நிகழ்ச்சிகள், குர்ஆன் விளக்கங்கள், ஹதீஸ் தெளிவுரைகள் என அனைத்தையும் இவர்கள் நடத்துகின்றார்களே எப்படி இவை அனைத்தும் முடிகின்றது? இவர்களுக்கு மாத்திரம் எங்கிருந்து வந்தது இந்த ஆர்வம்?

அரசியல் வாதிகளுக்கும், நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பின்னால் திரண்ட இளைஞர் படையணி இன்று ஏகத்துவ இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து களப்பணி ஆற்ற வந்த மர்மம் என்ன?

என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்”

அல்குர்ஆன் 02:38

இறைவனின் வஹி செய்தியை மாத்திரம் யார் பின்பற்ற துணிந்து விட்டார்களோ அவர்கள் யாருக்கும், எதற்கும், எந்நேரத்திலும் பயப்படவே மாட்டார்கள். இந்தத் துணிவையும், தன்நம்பிக்கையையும் கொடுத்தது இந்த ஏகத்துவக் கொள்கை மாத்திரமே.

கடல் கடந்த மனித நேயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்பது தமிழகத்தில் மட்டுமல்லாது அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகளில் தனது கிளைகளை வளர்த்து பாரிய கொள்கை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்கை வாதிகளை வெரும் செவியேற்பாளர்களாக மாத்திரம் உருவாக்காது சமுதாயப் பணி செய்யும் நல்லுள்ளம் கொண்ட சமுதாய போராளிகளாகவும் இவ்வியக்கம் வளர்த்து விட்டது.

கடல் கடந்து தொழிலுக்காக சென்ற நாடுகளில் கூட மனித நேயத்தை வளர்க்கும் மகத்தான காரியத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்றால் அது இவ்வியக்கம் கொண்ட கொள்ளையின் வெற்றியே! இறைவனின் மகத்தான உதவியே தவிர வேறில்லை.

கடந்த பல வருடங்களாக தமிழ்நாட்டில் மாநில அளவில் அதிக இரத்ததான முகாம்களை நடத்தி முதல் இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் சமுதாய பேரியக்கம்.

இதன் வெளி மண்டலங்களாக செயல்படும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், TNTJ குவைத் மண்டலம், கத்தார், அபு துபை, பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமான் இன்னும் பல நாடுகளில் வருடா வருடம் இரத்த தானத்தில் முதல் இடத்தினை தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்களே பெற்றுக் கொள்கின்றன. இந்தளவுக்கு வேலைக்கு சென்றாலும், மறுமைக்குறிய காரியத்தை செய்வதில் பின் நிற்க்க மாட்டோம் என்பதை நாளும் நாளும் இவர்கள் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

அல்லாஹ் இவர்களின் அனைத்துப் பணிகளையும் பொருந்திக் கொண்டு நம் அனைவரையும் மறுமையில் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

ஆக்கம் : ரஸ்மின் MISc

1,939 total views, 2 views today