LATEST
Home » கட்டுரைகள் » விமர்சனங்கள் » பெண்கள் வீதியில் இறங்கி போராடுவது கூடுமா? – மாதம்பையும், கொழும்பும் ஓர் ஒப்பீடு.

பெண்கள் வீதியில் இறங்கி போராடுவது கூடுமா? – மாதம்பையும், கொழும்பும் ஓர் ஒப்பீடு.

கடந்த புதன் கிழமை (26.03.2014) அன்று இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கண்டித்தும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

தவ்ஹீத் ஜமாத் எதைச் செய்தாலும் நியாயமா? அநியாயமா? என்ற கண்ணோட்டமின்றி சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் சிலர் பெண்களை வீதியில் இறக்கி போராட விடலாமா? மாதம்பையில் பெண்கள் போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் உங்கள் போராட்டத்திற்கு மாத்திரம் பெண்களை அழைக்கலாமா? என்றெல்லாம் சில விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

முதலில் பெண்கள் போராட்டத்திற்கு வீதிக்கு வருவதில் எவ்வித தடையையும் மார்க்கம் விதிக்கவில்லை. இது தொடர்பாக விரிவாக விளக்குவோம். இப்போது மாதம்பையில் பெண்களை இறக்கி ஆர்ப்பாட்டம் செய்ததை எதிர்த்த தவ்ஹீத் ஜமாத் கொழும்பு ஆர்ப்பாட்டத்திற்கு பெண்களை அழைத்து சென்றது ஏன் என்ற விமர்சனத்திற்குறிய பதிலை ஆராய்வோம்.

மாதம்பையும், கொழும்பும் ஓர் ஒப்பீடு.

மாதம்பையில் ஜமாத்தே இஸ்லாமி சார்பாக கடந்த மாதம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இரண்டு பள்ளிகள் வேண்டாம் என்றும் பதாதைகளை தூக்கிய வண்ணம் பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பொருத்த மட்டில் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டதை நாம் விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக கலந்து கொண்ட காரணத்தைத் தான் தெளிவாக நாம் விமர்சனம் செய்தோம்.

அதாவது ஜமாத்தே இஸ்லாமியை சேர்ந்த பெண்களை நாம் விபச்சாரிகள் என்று சொன்னதாகவும், இப்போது தவ்ஹீத் ஜமாத்தே பெண்களை வீதிக்கு இறக்கியுள்ளதே? இது நியாயமா? என்ற பாணியில் தான் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

மாதம்பையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா நிலையத்தை ஜமாத்தே இஸ்லாமி தாக்கி அழித்தது மட்டுமன்றி தவ்ஹீத் வாதிகளையும் கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல் பெண்களை வீதிக்கு இறக்கி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என்றும், ஊருக்குள் இரண்டு பள்ளிகள் வேண்டாம் என்றும் கோஷமிட்டார்கள்.

தாக்கப்பட்டு, அநியாயம் இழைக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாத்தையே தடை செய்யக் கோரிக்கை வைப்பது என்பது எவ்வளவு அயோக்கியத் தனம்? அதுவும் தாக்கிய ஜமாத்தினரே கோரிக்கை வைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளவது? அதிலும் பெண்களை பகடைக் காய்களாக மாற்றி போராட விட்டு இலாபம் காண நினைப்பதை எவ்வளவு கொடுமை? இதைத் தான் தவ்ஹீத் ஜமாத் எதிர்த்ததே தவிர பெண்கள் வீதியில் இறங்கி போராடியதை எதிர்க்கவில்லை.

மாத்திரமன்றி குறித்த பெண்களை விபச்சாரிகள் என்ற விதத்தில் சமூக வலை தளங்களில் எழுதியவர்கள் கயவர்களும், காடையவர்களுமாகத் தான் இருப்பார்களே ஒழிய, அவர்கள் தவ்ஹீத் வாதிகளாக இருக்க முடியாது. யார் அப்படி எழுதியிருந்தாலும் நாம் கண்டிக்கத் தவறவில்லை என்பதை நினைவூட்டுகின்றோம்.

கொழும்பில் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொருத்த வரையில் அது நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

மாதம்பையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டதைப் பொருத்த வரையில் அது ஜமாத்தே இஸ்லாமியின் சுய இலாபத்திற்காகவும், சமுதாயத்தை காட்டிக் கொடுப்பதற்காகவும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

இரண்டு ஆர்பாட்டங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால் பிரச்சினையிருக்காது.

மாதம்பையில் பெண்கள் வீதிக்கி இறங்கி போராடியது மார்க்க அடிப்படையில் தவறு அல்ல. அவர்கள் போராடிய காரணம் தான் தவறானது அதனால் தான் நாம் அவர்களை எதிர்த்தோமே தவிர போராட்டத்திற்காக வீதிக்கு வந்தார்கள் என்பதற்காக எதிர்க்கவில்லை.

குறித்த போராட்டம் பற்றிய நமது விளக்க வீடியோவில் கூட , தவ்ஹீத் ஜமாத்தை தடை செய்ய வேண்டும் என்று வீதிக்கு வந்த பெண்கள் இனவாதத்திற்கு எதிராக, பள்ளி உடைப்புக்கு எதிராக, ஹிஜாப் பிரச்சினைக்கு எதிராகவெல்லாம் வீதியில் இறங்கி போராடினார்களா? என்ற கேள்வியை முன்வைத்தோம். இனவாதிகளுக்கு எதிராக போராடாதவர்கள், பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஹிஜாப் பிரச்சினைகளுக்காக பாதைக்கு இறங்காத பெண்கள் தவ்ஹீத் ஜமாத்தை தடை செய்யக் கோரிக்கை வைத்து மாத்திரம் வீதியில் இறங்கி போராடியதை எப்படி ஏற்றுக் கொள்வது? என்பதே நமது கேள்வியாக இருந்தது.

தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொழும்பில் போராட்டத்திற்கு வந்த பெண்களோ இரண்டு காரணங்களுக்காக வந்தார்கள்.

நமது தாய் நாட்டிற்கு எதிராக ஜெனீவா மனித உரிமைப் பேரைவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிக்க வேண்டும்.

இரண்டாவது இலங்கையில் இனவாதம் புரிந்து பள்ளிகளை உடைத்து, முஸ்லிம்களை வியாபாரத் தளங்களை தாக்கி, முஸ்லிம் பெண்களை ஹிஜாபை கொச்சைப் படுத்தும் இனவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக்காகத் தான் கொழும்பில் தவ்ஹீத் ஜமாத் போராட்டம் நடத்தியது. பெண்களும் இதற்காகத் தான் அதில் கலந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இனி பெண்கள் வீதியில் இறங்கி போராடுவது தொடர்பாக வைக்கப்படும் விமர்சனத்திற்குறிய பதிலைப் பார்ப்போம்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகிய தீர்வு சொல்லும் மார்க்கமாக அன்று தொட்டு இன்று வரை இவ்வுலகில் நிலைத்திருப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் தூய கொள்கைகள் மாத்திரமே.

இம்மார்க்கத்தை ஏற்று வழி நடக்கும் நாம் அதன் அனைத்துக் கொள்கைகளையும் தெளிவாகவும், முறையாகவும் விளங்கிச் செயல்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தமட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் நடத்துவதையும், ஜனநாயகத்தையும் இஸ்லாம் என்றும் தடுக்கவில்லை. நமது சமுதாயம் மற்றவர்களினால் பாதிப்புக்குள்ளாக்கப்படும் போது அதற்கு எதிராக போராட்டக் களத்தில் குதிப்பதை இஸ்லாம் என்றும் தடுத்ததில்லை.

வீதியில் இறங்கிப் போராடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா?

தங்கள் கண்களில் எண்ணையை தேய்த்துக் கொண்டு அலையும் ஒரு கூட்டத்தார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தைப் பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.  இவர்கள் எப்படி ஆண்கள், பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வீதியில் இருந்து போராட்டம் நடத்துவார்கள்? இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் காட்டுவார்களா? அவர்கள் செய்யும் விமர்சனத்தின் முக்கிய சாரம் இதுதான்.

போராட்டம் நடத்துவதற்கு மார்க்கதில் ஆதாரம் கேட்கும் இவர்களின் இந்த வறட்டு வாதத்திற்கு பதில் சொல்வதற்கு முன்பதாக ஒரு விஷயத்தை இங்கு நினைவுக்கு கொண்டு வருகின்றோம்.

அதாவது போராட்டத்திற்கு ஆண்களையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு வருவதை விமர்சனம் செய்யும் இந்த கண்ணியவான்கள்(?) யாரும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாக பழகும் அல்லது கலந்து கொள்ளும் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை. செய்வதற்கு அவர்களுக்கு துப்பும் இல்லை.

இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் “கெசினோ”க்களில் சென்று கும்மாலமிடுகிறார்கள். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் பார்ப்பதற்கு ஆண்கள், பெண்கள் என்று இஸ்லாமியர்களும் அணி சேர்கிறார்கள். கடைத் தெருக்களில் சர்வ சாதாரணமாக பெண்கள் நடமாடுகின்றார்கள். மெயின் பஜார்களில் பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இவைகளைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதற்கு இந்த உஷார் மடையர்களினால் முடியாதாம். நபியவர்களை கேவலப்படுத்தியவனை கண்டித்து களத்தில் இறங்கும் இஸ்லாமிய தாய்மார் பற்றி மாத்திரம் தான் இவர்களுக்கு அக்கரை வருகின்றதாம்.

இஸ்லாமிய உம்மா பாதிக்கப்படும் போது நாம் வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் ஒரு போதும் தடை செய்யவில்லை. மாறாக அதற்கு அனுமதியளித்துள்ளது. “ஜனநாயகம் நவீன இணைவைத்தலா?” என்ற ஆய்வுக் கட்டுரையில் இது தொடர்பான விரிவான விளக்கம் அறிந்துகொள்ளலாம்.

பெண்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளலாமா?

பெண்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் தெளிவான அனுமதியை தருகின்றது. பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெரு நாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது.

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்துகொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்துகொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக்கொடுக்கட்டும்! என்றார்கள்.

(ஆதாரம் : புஹாரி 351)

இவர்களின் வாதப்படி பெண்களை போராட்டத்திற்கு அழைத்துக் கொண்டுவருவது பெண்களை காட்சிப் பொருளாக்குவது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை காட்சிக்கு வைத்தார்கள் என்று ஆகுமே? அதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களே? என்றெல்லாம் இவர்கள் கேட்பார்கள் போல.

ஆண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் அழைத்து வருவதுதான் இவர்களின் பிரச்சினை. ஆனால் நபியவர்களின் காலத்தில் ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை. என்பதை ஹதீஸ்களின் மூலம் நாம் தெளிவாக அறிய முடிகின்றது.

நபியவர்களின் காலத்தில் தொழுகைக்கு வந்த ஆண்களும், பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும். நபியின் காலத்தில் இப்படி நடந்ததினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள்.

(ஆதாரம் : புஹாரி 193)

போர்க்களத்திலும் பெண்கள்.

நபியவர்களின் காலத்தில் போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டார்கள் காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உதவுதல் என்று வரும் போது ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் ஏற்படும் என்பது இங்கு கவணிக்கத்தக்கது.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்-  வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர். அதைப் பல ஆண்களும் பார்த்துள்ளனர்.

(புஹாரி : 324, 351, 979, 1250, 1953)

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (விடைபெறும்ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம்குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்-ன் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

(ஆதாரம் : புஹாரி 6228)

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

யாரெல்லாம் பெண்களை அழைத்துக் கொண்டு போராட்டக் களத்திற்கு வருவதைத் தடையென்கிறார்களோ அவர்கள் தமது மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வார்களா? இல்லையா? செல்வார் என்றால் தனது மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இந்த கேள்வி கேட்பவர்களை நோக்கியே திரும்பும்.

கேள்வி கேட்பதில் ஜாம்பவானாக இருக்கும் இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பார்களா? இல்லையா? அனுமதிப்பார்கள் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தங்களுக்கெதிராக இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும்.

இவர்களின் குடும்பத்துப் பெண்கள் முறையாக ஆடை அணிந்து பள்ளிக் கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்வார்களா? இல்லையா? செல்வார்கள் என்றால் பலரது பார்வையில் படுவார்களா? இல்லையா? மேற்கண்ட அதே கேள்வியைத் தனக்குத் தானே இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். பெரிய கூட்டங்களில் பெண்கள் மீது படும் பார்வையை விட ஓரிரு பெண்கள் மீது பார்வை கூர்மையாகப் படுமே அது பரவாயில்லையா?

மார்க்க அடிப்படையில் ஒன்றைக் கூடாது என்ற கருத்தை விதைப்பவர் அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் தான் தனது கருத்தை முன் வைக்க வேண்டும். நாம் ஆதாரத்தை முன் வைத்து விட்டோம்.  வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது கூடாது என்பவர்கள் தங்கள் கருத்தில் நியாயவான்களாக இருந்தால் ஆதாரத்துடன் அவற்றை முன்வைக்கட்டும்.

குறிப்பு : இந்த ஆக்கத்திற்கு சகோதரர் பீ.ஜெ யின் தளத்தில் இருந்தும் சில பகுதி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

977 total views, 1 views today