LATEST
Home » எழுத்தாளர்கள் » ரஸ்மின் MISc » 2017 » 1000ம் நாட்களாகியும் நீதி இல்லை, அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

1000ம் நாட்களாகியும் நீதி இல்லை, அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

பல தரப்பட்ட இனங்களையும், மொழி பேசுவோரையும், பல் மதங்களை பின்பற்றுவோரையும் கொண்ட ஒரு நாடு இலங்கையாகும். இலங்கையின் சமுதாயப் பரம்பலில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் இலங்கையின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பையும், நாட்டின் அபிவிருத்தியில் பாரிய செல்வாக்கையும் செலுத்தி வரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது பேரினவாதிகளினால் கலவரங்கள் நடத்தப்பட்டு முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது வரலாறு.

இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட பல கலவரங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அந்த வகையில் கடந்த 16.06.2014 அன்று இலங்கையின் தெற்கு, அளுத்கமை, பேருவலை பகுதி முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் ஒன்றை பேரினவாதிகள் நடத்தி முடித்தார்கள்.

அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்று சுமார் 1000ம் நாட்களை தாண்டி விட்ட பின்னரும் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வில்லை.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் பின்னனி

2014.06.12ம் தேதி அளுத்கம பகுதியில் ஒரு புத்த பிக்கு வந்த காரும் ஒரு முஸ்லிம் ஓட்டிவந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி, சிறிய விபத்து நடந்தது. இதனால், புத்த பிக்குவின் வாகன ஓட்டுநருக்கும் முஸ்லிம் நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் புத்த பிக்குவை அந்த முஸ்லிம் நபர் தாக்கிவிட்டதாகப் பொய் செய்தியைப் பரப்பி, பிரச்னையைத் திசைதிருப்பினார்கள். இதனால், குற்றமே செய்யாத இரண்டு முஸ்லிம்களை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தார்கள். இதைக் காரணமாக வைத்து, ‘பொதுபலசேனா’ என்ற பௌத்த பேரினவாத அமைப்பு, முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களைக் கருவறுக்கும் நோக்கில் 1,000-க்கும் மேற்பட்டவர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திரட்டினார்கள்.

முஸ்லிம்களோ, தமிழர்களோ பத்து, இருபது பேர் சேர்ந்து ஒரு சிரிய ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அப்போது அனுமதி மறுத்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கியது.

சமாதானச் சூழ்நிலை சீர்கெடுவதற்கு முன்பே சுதாரித்து ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்திருந்தால்,  பிரச்னைகள் வளர்ந்து இருக்காது.

பொது பல சேனாவினர் ஆர்பாட்டம் செய்வதாக அறிவித்தவுடனேயே முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தஞ்சமடைய ஆரம்பித்தார்கள். அளுத்கம தர்கா நகருக்கு மத்தியில் அமைந்துள்ள சீனவத்த பகுதியில் இருந்த பல முஸ்லிம்களின் வீடுகளை கல்வீசி தாக்கினர். அதோடு, பள்ளிவாசலில் குழுமியிருந்த முஸ்லிம்களை அருவருப்பான வசனங்களால் திட்டினார்கள். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

15-ம் தேதி மாலை 6.45 மணியளவில் அளுத்கம பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலிசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பள்ளியில் ஒன்றுகுழுமி இருந்த முஸ்லிம்களால் தங்கள் வீடு​களுக்குக்​கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதனைச் சாதமாக பயன்படுத்திய ‘பொதுபலசேனா’வின் ஆட்கள் போலீஸ்காரர்கள் இருக்கும்போதே முஸ்லிம்களின் வீடுகள் மீது கல் எறியத் தொடங்கினார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள். முஸ்லிம்கள் நடத்திவரும் கடைகளையும் பள்ளி​வாசல்களையும்கூட தீயிட்டுக் கொளுத்தினர்.

அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன்தான் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கினார்கள். அளுத்கம, தர்கா நகர், வெல்பிடிய, அதிகாரிகொட ஆகிய முஸ்லிம்களின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தினார்கள். இனவாதிகளின் தாக்குதலால் முஸ்லிம்களின் பல கோடிக்​கணக்கான ரூபாய்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டது ‘பொதுபலசேனா’ அமைப்பின் பொதுச்​செயலாளர் ஞானசார தேரர் என்பவர். ‘எந்த முஸ்லிமாவது ஒரு சிங்களன் மீது கையை வைத்தாலும், அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்’ எனப் பேசி பெரும்பான்மை மக்களின் மனத்தில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பு உணர்வை அதிகப்படுத்தினார். இவர் பேசிய பேச்சால்தான், முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து, இதுவே மிகப்பெரும் கலவரம் நடக்கவும் காரணமாகிவிட்டது.

பல கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரும்பாலான வீடுகள் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. பல பள்ளிவாசல்கள் இந்த பௌத்த மதவெறியர்களால் எரிக்கப்பட்டன. மூன்று அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தார்கள். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த வந்திருந்தால், பள்ளிகளையும் வீடுகளையும் கடைவீதிகளையும் தாக்கி அழிக்கும் அளவுக்கு ஆயுதங்களுடன் வந்திருக்க சாத்தியமே இல்லை. முஸ்லிம்களை தாக்க வேண்டும்; எமது உடைமைகளை அழிக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டே சதித்திட்டம் தீட்டியே களத்தில் இறங்கியிருந்தார்கள் கலவரக்காரர்கள்.

கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காவல் துறை

முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் அளுத்கமை, பேருவலை பகுதிகளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதனை தடுப்பதற்கு பதிலாக கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று அப்பகுதி மக்கள் அங்கலாய்த்தார்கள்.

போலிஸ் மற்றும் இராணுவத்தினர் நினைத்திருந்தால் அக்கலவரத்தை தடுத்திருக்கலாம், குறைந்த பட்டம் ஓரளவுக்காவது குறைத்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்வதை விடுத்து வெரும் பார்வையாளர்களாகத்தான் இராணுவமும், போலிசும் தன் கடமையை செய்தார்கள்.

முஸ்லிம்களுக்கு மட்டும் ஊரடங்கு சட்டம்.

அளுத்கமை கலவரத்திற்கு காரணமாக அமைந்த ஞானசார தேரரின் ஆர்பாட்டத்திற்கு 2000க்கும் அதிகமான போலிசாரை பாதுகாப்புக்கு நிறுத்திய அப்போதைய அரசு. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது அதனை தடுப்பதற்கு ஆரம்பமாக போலிசாரை களமிறக்க வில்லை.

மட்டுமன்றி, இறுதி நேரத்தில் களமிறக்கப்பட்ட போலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு அளுத்கமை மற்றும் பேருவலை உள்ளிட்ட பெரும்பகுதிக்கு ஊரடங்கு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது அரசாங்கம்.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தான் பெரும்பாலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

முஸ்லிம்களில் யாரும் வெளியில் வரமுடியாதவாறு ஊரடங்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்புத் துறை பார்த்துக் கொண்டது. முஸ்லிம்களை வெளியில் வரமுடியாமல் ஊரடங்கு சட்டத்தை போட்டு விட்டு கலவரக்காரர்களை சுதந்திரமாக நடமாட விட்டது பாதுகாப்புத் துறை.

முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாயல்கள் என்று கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் கொள்ளை அடித்ததுடன், தீ வைத்தும் எரித்தார்கள், பெற்றோல் குண்டுகளை வீசினார்கள்.

இதில் சுமார் 03 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு பலர் பலத்த காயத்திற்கும் ஆளானார்கள்.

உடனடியாக களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத்.

தாக்குதல் ஆரம்பித்தது முதல் கலவரப்பகுதி முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டது தவ்ஹீத் ஜமாஅத்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை சேகரிக்கும் பணியில் ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகளும் ஈடுபடுத்தப்பட்டது. அனைத்து கிளைகளிலிருந்தும் தொண்டர்கள் அழைக்கப்பட்டு உடனடியாக அளுத்கமை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் ஒரு கோடி அளவுக்கான உதவிகளை பொது மக்களிடமிருந்து பெற்றெடுத்து ஒப்படைத்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அனைத்து இயக்கத்தவர்களும் அறிக்கை விட்டும், கருத்துச் சொல்லிக் கொண்டும் இருந்த நேரத்தில் களத்தில் இறங்கி வேலை செய்தது தவ்ஹீத் ஜமாஅத்.

இந்நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

  • கலவரத்தில் ஈடுபட்டவர்களை, கலவரங்களுக்குக் காரணமான ஞானசார தேரரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.
  • ‘பொதுபலசேனா’ இயக்கத்தை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்.
  • கேள்விக்குறியாகி இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதிசெய்ய வேண்டும்.
  • அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
  • சொத்துக்களை இழந்தவர்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

அளுத்கமை கலவரம் நடக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு சுற்றுப் பயனத்தில் இருந்தார். அங்கிருந்தவாரே அவர் அறிக்கையும் விடுத்தார்.

அப்போதைய பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ இக்கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு முறையான கட்டளைகளைக் கூட இடாமல், இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்தது மாத்திரமன்றி இனவாதிகளுக்கு ஏதும் பாதிப்பு நடந்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

வெளிநாட்டு பயனத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மஹிந்த ரஜபக்ஷ கலவரம் நடைபெற்ற சில பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு விட்டு திரும்பினார். ஆனால் கலவரக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்நிலை தான் அவருடைய ஆட்சி இழப்புக்குக் கூட காரணமான அமைந்தது எனலாம்.

உலக அளவில் கண்டனத்திற்கு உள்ளான இலங்கை அரசு.

அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளினால் உண்டாக்கப்பட்ட குறித்த கலவரத்திற்கு உலக மட்டத்தில் பலத்த கண்டனங்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக அப்போது செயல்பட்ட நவநீதம் பிள்ளை குறித்த கலவரம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டார்.

அளுத்கமை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அறிக்கை வெளியிட்டார்.

கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டன.

கத்தார், குவைத், பாக்கிஸ்தான், அப்கானித்தான், மலேசியா ஆகிய நாடுகள் இது தொடர்பில் நேரடியாகத் தலையிடுவதாக உறுதியளித்ததுடன், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறும், அது தவறும் பட்சத்தில் இலங்கைக்கான தமது விசா வழங்கல் முறையில் மாற்றம் கொண்டு வருவதாகவும் வங்காளதேசம், ஈரான், இராக், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைத்தீவுகள், நைஜீரியா, பாக்கிஸ்தான், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் கொழும்பிலுள்ள தமது தூதரகங்களினூடாக இலங்கை அரசாங்கத்தை எச்சரித்ததுடன் அவற்றில் சில நாடுகள் இந்நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் இலங்கையர் தொழில் வாய்ப்புப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக் காட்டின.

இலங்கை தூதுவராலயத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – TNTJ சார்பில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கலவரம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (அப்போதைய) மாநிலத் தலைவராக இருந்த பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு இருக்கும் மக்களுக்கு ஒன்று என்றால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய பொதுபலசேனா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசை வலியுறுத்த சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை 17.06.2014ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தி இருக்கிறோம். இந்தக் கலவரத்தை பொதுபலசேனா அமைப்பும் அதன் பொதுச்செயலாளர் ஞானசார தேரரும்தான் முன்நின்று நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை தேவை.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு உடந்தையா? புத்த பிக்குகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியபோதும் அவர்​கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க​வில்லை​யே ஏன்?

புத்த பிக்குகளை முஸ்லிம்கள் தான் தாக்கினார்கள் என்பதற்கு எந்த​வித ஆதாரமும் இல்லை. அப்படியே இருந்தாலும் சம்பந்தப்பட்டவரைத்தான் கைது செய்திருக்க வேண்டுமே தவிர, ஒரு இனத்தையே எப்படி தாக்கலாம்? அவர்கள் உடைமைகளை சூறையாடி, மசூதியைக்கூட கொளுத்தியிருக்கிறார்கள்.

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் என்றவர்களிடம் ஆயுதம் வந்தது எப்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, கலவரக்காரர்கள் மட்டும் சுதந்திரமாக நடமாடியது எப்படி? உயிர்ச் சேதங்கள், பொருள் சேதங்கள் ஏற்பட்டபோதும் அதிகார வர்க்கம் கைகட்டி நின்றது ஏன்?

முஸ்லிம்களின் இது போன்ற ஏராளமான சந்தேகங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். என்றார்.

இதே நேரம், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், மிகின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றின.

இந்தளவுக்கான பாரிய கண்டனத்தை அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் இலங்கை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது.

முடிவுக்கு வராத விசாரனை கமிஷன்

அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது, கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு விசாரனைக் கமிஷனும் அமைக்கப்பட்டது.

எந்தவொரு விசாரனைக் கமிஷனும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் நிவாரணத்தை பெற்றுத் தரவில்லை.

கலவரம் ஏற்பட்டு சுமார் 1000ம் நாட்களை தாண்டியும் இதுவரை எவ்விதமான நீதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வில்லை.

சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தாத போலிசார்

அளுத்கமை கலவரத்திற்கு நீதி மறுக்கப்படுவது தொடர்பில் RRT அமைப்பின் தலைவரும், அளுக்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வருபவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் பொதுபல சேனா வன்முறையை நடாத்தி இன்று 11.02.2017ம் தேதி சனிக்கிழமையுடன் 1000 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

முஸ்லிம் சமுதாயம் நீதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பொலிஸாரின் திட்டமிட்ட இழுத்தடிப்புக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகள் கவனத்தில் எடுக்கப்படாத அபாயம் இலங்கையில் நீடிக்கிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்ற எச்சரிக்கையை நாம் உரிய தரப்புகளுக்கு கூற விரும்புகிறோம்.

அளுத்கமை கலவரத்தில் 03 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அந்த துயரச் சம்பவம் நடந்து இன்று 11ம் தேதி சனிக்கிழமையுடன் 1000 நாட்கள் கடந்துவிட்டன. அந்த குடும்பத்தவர்களைப் பற்றி நாம் மறந்துவிட்டோம். நமது சமூகம் மறந்துவிட்டது. அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இது மிகத் துயரமானது.

அளுத்கமயில் மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ வன்முறைகள் நடந்துள்ளன. பள்ளிவாசல்களுக்கு எதிரான வன்முறைகளும் உள்ளன. இந்தப்பட்டியல் நீளமானது. ஆனால் நீதி கிடைக்கவில்லை.

நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறோம். பொலிஸார் வருவதில்லை. சந்தேக நபர்களை ஆஜர்படுத்தாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவோம் எனக்கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது எனவும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தனது கவலையை வெளியிட்டார்.

முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது – ஐ.நா

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்காக விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயா அவர்கள் பத்து நாள் விசேட விஜயம் ஒன்றை கடந்த 10.10.2016ம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார்.

இலங்கை வந்த ஐ.நா விசேட பிரதிநிதியை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகள் சந்தித்து இலங்கை முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டு வந்தன.

அந்த வகையில் ஐ.நா வின் இலங்கை அலுவலகத்தில் வைத்து ஐ.நா வின் விசேட பிரதிநிதியை சந்தித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கமை வன்முறை மற்றும் பொது பல சேனா அமைப்பு உள்ளிட்ட இனவாத அமைப்புகளினால் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்தது.

அதே போல் ஐ.நா பிரதிநிதியை சந்தித்த RRT சட்டத்தரணிகள் அமைப்பும் அளுத்கமை தாக்குதல் விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்காமை தொடர்பில் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அளுத்கமை கலவரம் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தான் அறிக்கை சமர்ப்பிப்பதாக ரீட்டா அப்போது உறுதியளித்தார்.

மார்ச் 2017ல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் பேசிய ரீட்டா ஐசேக் நதேயா அவர்கள் அலுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுவதை தான் உணர்வதாகவும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் தான் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேரினவாதிகளினால் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் பொறுமையை கடைப்பிடியுங்கள் என்று தலைவர்களினால் அமைதி வார்த்தைகள் சொல்லப்படுகிறது. “எங்கள் அரசு உங்களை காப்பாற்றும்” என்று அரசாங்கமும், அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் வாரத்திற்கு ஒரு முறையாவது வார்த்தை ஜாலம் காட்டுகிறார்கள். ஆனால் இதுவரை முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் தீர்வு கிடைக்க வில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

-ரஸ்மின் MISc

1,099 total views, 2 views today